வெளிநாடுகளில் நிதி பெற்று 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டன - மத்திய மந்திரி ஷெகாவத்


வெளிநாடுகளில் நிதி பெற்று 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டன - மத்திய மந்திரி ஷெகாவத்
x

வெளிநாடுகளில் நிதி பெற்று, 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டன. அதனால்தான் அவற்றுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டன என மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.


கலந்துரையாடல்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த அமெரிக்க இந்திய சமூக தலைவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய ஜலசக்தித் துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் இந்தியா, மாற்றத்தின் காலகட்டத்தில் உள்ளது. வருகிற 2047-ம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்று உழைத்து வருகிறோம்.

வாழ்நாளில் ஒருமுறை, நூற்றாண்டுகளில் ஒருமுறை வரக்கூடிய வாய்ப்பு தற்போது இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறது. அதை, இந்தியாவின் விளம்பரத் தூதர்களான வெளிநாடுவாழ் இந்தியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியா காணும் மாற்றத்தில் ஒரு முக்கிய பங்காற்ற வேண்டும்.

இந்தியாவை புறக்கணிக்க முடியாது

இந்தியாவைப் பற்றிய உலக பார்வை தற்போது மாறியுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. பல பிரச்சினைகளுக்கு இந்தியாவை உலகம் எதிர்நோக்குகிறது. தற்போது உலகத்தின் எந்த தளத்திலும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொண்டு நிறுவனங்கள்

நிகழ்ச்சியில் பேசிய தொழில் அதிபர் ஒருவர், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குபடுத்துதல் சட்டத்தால் இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

அதற்கு பதிலளித்து பேசிய ஷெகாவத், மத்திய அரசு அந்த பிரச்சினைகளை அறிந்திருக்கிறது, உரிய காலத்தில் அவை சரிசெய்யப்படும் என்றார்.

இந்தியாவில் சுமார் 20 ஆயிரம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் நிதி பெற்று, நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டது மத்திய அரசு விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்துதான் தொண்டு நிறுவனங்களுக்கான விதிகள், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. அதில் சில நல்ல தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டது உண்மைதான் என்று கூறினார்.


Next Story