எல்லை உட்கட்டமைப்பு பணியில் சீனாவை 3 ஆண்டுகளில் இந்தியா வீழ்த்தி விடும்; உயரதிகாரி தகவல்


எல்லை உட்கட்டமைப்பு பணியில் சீனாவை 3 ஆண்டுகளில் இந்தியா வீழ்த்தி விடும்; உயரதிகாரி தகவல்
x
தினத்தந்தி 7 Sep 2023 3:02 PM GMT (Updated: 7 Sep 2023 4:27 PM GMT)

அசல் எல்லை கோட்டு பகுதியில் உட்கட்டமைப்புக்கான வளர்ச்சி பணிகளில், சீனாவை 3 ஆண்டுகளில் இந்தியா வீழ்த்தி விடும் என உயரதிகாரி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

சீனா மற்றும் இந்தியா இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நள்ளிரவில் கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த சண்டையில் இரு நாட்டு வீரர்களும் உயிரிழந்தனர். இதன்பின்னர், பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு படைகள் வாபஸ் பெறப்பட்டன. எனினும், தொடர்ந்து எல்லையில் பதற்ற நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய எல்லை சாலைகள் அமைப்பின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அசல் எல்லை கோட்டு பகுதியில் 3,488 கி.மீ. தொலைவுக்கு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் ஆக்கப்பூர்வ பணியில் செயல்பட்டு வருகிறது.

இந்த உட்கட்டமைப்பு வளர்ச்சி பணியில் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் சீனாவை, இந்தியா வீழ்த்தி விடும். கடந்த 2 முதல் 3 ஆண்டுகளில் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான 295 திட்ட பணிகள் நிறைவடைந்து உள்ளன என அவர் கூறியுள்ளார்.

எல்லை பகுதிகளில் உட்கட்டமைப்புக்கான வளர்ச்சி பணிகளில் இதற்கு முந்தின அரசுகளின் நிதி விடுவிப்பு பற்றி அவர் ஒப்பிட்டு பேசினார்.

அப்போது அவர், இந்தியாவுக்கு முன்பே ஒரு தசாப்தத்திற்கு முன், அசல் எல்லை கோட்டு பகுதி முழுவதும் சீனா அதன் உட்கட்டமைப்புக்கான வளர்ச்சி பணிகளை தொடங்கி விட்டது.

ஆனால், தற்போதுள்ள அரசு, தனது எண்ணம் மற்றும் கொள்கையை மாற்றி உள்ளது. எங்களுக்கு ஆதரவளித்து உள்ளது. அனைத்து வித வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றுடன் பணிகளை முடிப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.


Next Story