சபரிமலையில் விமான நிலையம் அமைக்க ஆய்வு: மாநிலங்களவையில் தகவல்


சபரிமலையில் விமான நிலையம் அமைக்க ஆய்வு: மாநிலங்களவையில் தகவல்
x

அய்யப்பன் கோவில் அமைந்துள்ள சபரிமலையில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் ஆய்வில் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில், மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:-

கேரள மாநிலம் சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்துக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி கேரள அரசின் கேரள மாநில தொழில் வளர்ச்சி கழகம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது திட்டத்தை சமர்ப்பித்தது. அதுபற்றி விமான நிலையங்கள் ஆணையம், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், ராணுவ அமைச்சகம், கேரள தொழில் வளர்ச்சி கழகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆய்வு

அந்த அமைப்புகள் தெரிவித்த கருத்துகளின்படி, தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள தொழில் வளர்ச்சி கழகத்தை கேட்டுக்கொண்டோம். அந்த அறிக்கை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதுபற்றி கடந்த நவம்பர் மாதம் நடந்த விமான நிலையங்களுக்கான வழிகாட்டு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி, நிலம் இருப்பு, வில்லங்கத்தை அகற்றுதல் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை கேரள தொழில் வளர்ச்சி கழகத்திடம் கேட்டோம். அந்த தகவல்களை கடந்த டிசம்பர் மாதம் அளித்தது. அவற்றை ஆய்வு செய்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

'நாக்' அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள்

மக்களவை கேள்வி நேரத்தில், மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார் கூறியதாவது:-

நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களில் 14 ஆயிரத்து 600 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை விரைவாக நிரப்புமாறு உத்தரவிட்டுள்ளோம்.

நாட்டில், 695 பல்கலைக்கழகங்களும், 34 ஆயிரத்து 734 கல்லூரிகளும் தேசிய தர மதிப்பீட்டு அங்கீகார கவுன்சிலின் (நாக்) அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

மக்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க விரிவான மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.


Next Story