எரிபொருள், உணவு ஏற்றுவதற்காக ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் கர்நாடகா வருகை


எரிபொருள், உணவு ஏற்றுவதற்காக ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் கர்நாடகா வருகை
x

எரிபொருள் மற்றும் உணவு ஏற்றுவதற்காக ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் நேற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் கடற்படை தளத்திற்கு வந்தது.

பெங்களூரு,

இந்திய கடற்படைக்கு சொந்தமான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ். விக்ராந்த்' போர் கப்பல் நேற்று முதல் முறையாக கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரில் உள்ள கடம்பா கடற்படை தளத்திற்கு வந்தது. இதற்கு முன்பு அந்த போர் கப்பல் கொச்சி துறைமுக பகுதியில் அரபிக்கடலில் சுற்றி வந்தது.

தற்போது அந்த போர்க்கப்பல் கடம்பா கடற்படை தளத்தில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இங்கு இந்த கப்பல் ஒரு மாதம் இருக்கும் என்றும், எரிபொருள், கப்பல் சிப்பந்திகளுக்கான உணவு ஆகியவற்றை ஏற்றப்பட்டு பின்னர் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் கிழக்கு மற்றும் மேற்கு இந்திய கடலோரங்களில் சுற்றிவர இருக்கிறது என்று கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பழுதுகளை சரிசெய்யும் தொழில்நுட்பம்

ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய கடற்படை தளங்களில் ஒன்றான கடம்பாவில் 40 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்தும் அளவிற்கு தளம் அமைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இந்த கடற்படை தளத்தில் 'டிராலி சிப்பிங் சிஸ்டம்' என்ற தொழில்நுட்பம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

கப்பல்களை கடலில் இருந்து மேலே தூக்கி பழுதுகளை சரிசெய்யும் தொழில்நுட்பம்தான் 'டிராலி சிப்பிங் சிஸ்டம்' என்று கூறப்படுகிறது. நாட்டிலேயே அந்த வகையான தொழில்நுட்பம் முதன்முதலாக கார்வார் துறைமுகத்தில்தான் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என்றும் அந்த கடற்படை அதிகாரி கூறினார்.

1 More update

Next Story