பொன்னாச்சியில் அட்டகாசம் செய்து வரும் காட்டுயானையை பிடிக்க தீவிர நடவடிக்கை


பொன்னாச்சியில் அட்டகாசம் செய்து வரும் காட்டுயானையை பிடிக்க தீவிர நடவடிக்கை
x

பொன்னாச்சி உள்ளிட்ட கிராமங்களில் அட்டகாசம் செய்து வரும் காட்டுயானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைக்கப்படும் என வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொள்ளேகால்:-

காட்டுயானை

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா மலை மாதேஸ்வரா வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு காட்டுயானை தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த காட்டுயானை ஹனூர் தாலுகாவில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன்னாச்சி, காடஞ்சினஹள்ளி, ஹஸ்தூரு, மரூரு, ராமேகவுடனஹள்ளி, கெக்கேஹொலே, கெரட்டி ஆகிய கிராமங்களில் முகாமிட்டு தொடர்ந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.

கடந்த மே மாதம் பொன்னாச்சி கிராமத்திற்குள் புகுந்து தென்னை மரங்களையும், பலாப்பழ மரங்களையும் நாசப்படுத்தியது. மேலும் பலாப்பழங்களை ருசித்தது. கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மரூரு கிராமத்திற்குள் புகுந்த யானை நாகண்ணா என்பவரின் வீட்டு வளாகத்தில் புகுந்து அங்கிருந்த இரும்பு கேட்டையும், மோட்டார் சைக்கிளையும் நாசப்படுத்தியது.

கும்கி யானைகள்

பின்னர் கடந்த மாதம்(ஜூலை) 27-ந் தேதி ராம் ஆதப்பா என்பவருக்கு சொந்தமான தென்னை தோட்டத்திற்குள் புகுந்து 20 தென்னை மரங்கள், 5 மாமரங்கள் ஆகியவற்றை நாசப்படுத்தியது. தொடர்ந்து பயிர்களை நாசப்படுத்தி வரும் இந்த யானையை பிடிக்க கோரி வனத்துறையினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் வனத்துறையினர் இதுவரை அந்த காட்டுயானையை பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஆதங்கத்தில் உள்ளனர்.

இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், 'பொன்னாச்சி உள்ளிட்ட கிராமங்களில் அட்டகாசம் செய்து வரும் காட்டுயானையை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் அந்த காட்டுயானையை பிடிக்க திட்டம் வகுத்துள்ளோம். இந்த பணியில் 50 முதல் 60 வனத்துறை ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதுவரை கும்கி யானைகள் வரவழைக்கப்படவில்லை. அதுபற்றி அரசிடம் பேசி விரைவில் கும்கி யானைகளை வரவழைப்போம்' என்றார்.


Next Story