சாலை தடுப்பில் மோதி கார் விபத்து: ஐ.டி. ஊழியர்கள் 3 பேர் பலி


சாலை தடுப்பில் மோதி கார் விபத்து: ஐ.டி. ஊழியர்கள் 3 பேர் பலி
x

பெங்களூரு அருகே சாலை தடுப்பில் கார் மோதி ஐ.டி. ஊழியர்கள் மூன்று பேர் பலியானார்கள்.

நெலமங்களா:

பெங்களூரு புறநகர் நெலமங்களாவில் துமகூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் மைசூருவில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று வந்தது. அந்த காரில் 5 பேர் பயணம் செய்தனர். காரை அகஸ்டின் என்பவர் ஓட்டினார். அந்த கார் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அகஸ்டினின் கட்டுப்பாட்டை கார் இழந்தது.

பின்னர் அந்த கார் தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணித்து வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெலமங்களா போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விபத்தில் உயிரிழந்தவர்கள் பெங்களூருவை சேர்ந்த ஐ.டி. ஊழியர்களான அகஸ்டின், விக்னேஷ் உள்ளிட்ட 3 பேர் என்பதும், படுகாயம் அடைந்தவர்கள் மிதுன் மற்றும் சத்ருகன் என்பதும் தெரிந்தது.

படுகாயம் அடைந்தவர்கள் சுய நினைவை இழந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story