போலி சாதி சான்றிதழ் வழக்கு: கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு இடையே மோதல்


போலி சாதி சான்றிதழ் வழக்கு: கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு இடையே மோதல்
x

போலி சாதி சான்றிதழ் வழக்கு விசாரணையில் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு இடையே மோதல் எழுந்துள்ளதை தொடர்ந்து, இந்த விசாரணைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் போலி சாதி சான்றிதழ் மூலம் ஏராளமான மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், போலி சான்றிதழ் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இதை நீதிபதி சவுமன் சென் விசாரித்தார். தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு அவர் இடைக்கால தடை விதித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தொடர உத்தரவிட்டதுடன், இந்த உத்தரவின் நகல் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அனுப்பவும் ஐகோர்ட்டு பதிவாளருக்கு உத்தரவிட்டார். மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியை பாதுகாக்கும் நோக்கில் நீதிபதி சவுமன் சென் செயல்படுவதாக அவர் குற்றமும் சாட்டினார். இதனால் ஒரே கோர்ட்டில் பணியாற்றும் இரு நீதிபதிகளுக்கு இடையே மோதல் உருவாகி உள்ளது.

எனவே இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிபதிகளுக்கு இடையேயான மோதல் பெரிய அளவில் உருவெடுத்துள்ளதால், விடுமுறை தினம் என்றபோதும் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரித்தனர். அதன்படி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூர்யகந்த், அனிருத்தா போஸ் ஆகியோரை கொண்ட 5 நபர் அமர்வு இந்த விவகாரத்தை விசாரித்தது.

பின்னர் போலி சான்றிதழ் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.

மேலும் தனி நீதிபதி மற்றும் டிவிஷன் பெஞ்சில் நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணை அனைத்துக்கும் தடை விதித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் கொல்கத்தா ஐகோர்ட்டு மற்றும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story