காங்கிரஸ் கட்சியின் கருப்பு அறிக்கை: பா.ஜ.க. ஆட்சிக்கு வைத்த திருஷ்டி பொட்டு - பிரதமர் மோடி


காங்கிரஸ் கட்சியின் கருப்பு அறிக்கை: பா.ஜ.க. ஆட்சிக்கு வைத்த திருஷ்டி பொட்டு - பிரதமர் மோடி
x

மத்திய அரசின் 10 ஆண்டுகால தோல்விகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

புதுடெல்லி,

பா.ஜ.க.தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி இன்று காலை கருப்பு அறிக்கை வெளியிட்டது. மோடி அரசு பொருளாதாரத்தில் தோல்வி அடைந்து விட்டதாக கூறி கருப்பு அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார்.

காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கையை வெளியிட்ட சிறிது நேரத்தில் மாநிலங்களவைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ஓய்வு பெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

'மல்லிகார்ஜுன கார்கே இங்கே இருக்கிறார். ஒரு குழந்தை சிறப்பாக ஏதாவது செய்யும் போதும், விழாக்களுக்கு குழந்தை புத்தாடை உடுத்தி தயாராகும் போதும், தீய விஷயங்கள் மற்றும் கண் திருஷ்டிகளில் இருந்து குழந்தையை பாதுகாக்க பெரியவர்கள் அதற்கு திருஷ்டி பொட்டு வைப்பார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் புதிய பாதையில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. தீமையின் கண்களில் இருந்து நாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நமக்கு திருஷ்டி பொட்டு வைக்கும் முயற்சி ஒன்று நடந்துள்ளது. அதற்காக கார்கேவுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்' என்று பிரதமர் மோடி கிண்டலாக கூறினார்.

இதற்கிடையே இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு ஆடை அணிந்து மாநிலங்களவைக்கு வந்திருந்தனர். இதை பார்த்த பிரதமர் மோடி "மாநிலங்களவைக்குள் சில உறுப்பினர்கள் கருப்பு ஆடை அணிந்து வந்தபோது நாம் பேஷன் ஷோ அணிவகுப்பை பார்த்தோம்" என கிண்டல் செய்தார்.


Next Story