"கங்கணா பா.ஜ.க-வில் இணைவதை வரவேற்கிறோம் ஆனால்..."- ஜேபி நட்டா பேச்சு
பாஜக விரும்பினால் தேர்தலில் போட்டியிடத் தயார் என நடிகை கங்கணா சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
சிம்லா,
பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத் (வயது 35), இமாசல பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பா.ஜ.க. ஆதரவு முகம் காட்டி வருகிற நடிகை கங்கணா, மக்களும் பாஜகவும் விரும்பினால் தான் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடத் தயார் எனத் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
இது கவனம் பெற்ற நிலையில், கங்கனா கருத்து குறித்து பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இமாச்சல் தேர்தல் பரப்புரைக்காக சிம்லா வந்துள்ள ஜேபி நட்டா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர், "கங்கணா ரனாவத் பாஜகவில் சேருவது வரவேற்கத்தக்கது. கட்சியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவருக்கும் பாஜக இடம் உண்டு. ஆனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது எனது தனி முடிவு அல்ல. அடிமட்ட தொண்டர்கள் தொடங்கி, தேர்தல் கமிட்டி, நாடாளுமன்ற குழு வரை அனைவரிடமும் ஆலோசனை செய்யப்படும். பாஜகவில் இணையும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அவர்களின் வலிமை என்ன என்பதை கட்சிதான் முடிவு செய்யும்" என்றார்.