'மக்கள் இதயங்களை வெல்லுங்கள்' - காங்கிரசுக்கு கபில் சிபல் அறிவுரை


மக்கள் இதயங்களை வெல்லுங்கள் - காங்கிரசுக்கு கபில் சிபல் அறிவுரை
x

கோப்புப்படம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபல் அறிவுரை வழங்கி உள்ளார்.

புதுடெல்லி,

தென் மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. அங்கு 10-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கவும் இந்த வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.

'இதயங்களை வெல்லுங்கள்'

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்ட முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். மக்கள் மனங்களை வெல்வது என்பது இன்னும் கடினமானது. இனி வரும் 5 ஆண்டுகளுக்கு வெளிப்படையாகவும், நேர்மையாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடந்து கொள்வதன் மூலம் மக்களின் இதயங்களை வெல்லுங்கள்.

இது எதுவுமே இல்லாததால்தான் பா.ஜ.க. தோல்வியைத் தழுவியது என்று அவர் கூறினார்.

'வெற்றிக்கு தகுதியானது'

முன்னதாக தேர்தல் முடிவு வெளியானதும் கபில் சிபல் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்த பதிவில் அவர், "பிரதமர் தோற்று விட்டார். கர்நாடக மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 40 சதவீத கமிஷன், தி கேரளா ஸ்டோரி, பிரிவினைவாத அரசியல், அராஜகம், பொய்மை ஆகியவற்றுக்கு இனி இடம் இல்லை. வெற்றி பெற காங்கிரஸ் தகுதியானதுதான்" என குறிப்பிட்டுள்ளார்.


Next Story