கர்நாடக சட்டசபை தேர்தல்; 10 கி.மீ. திறந்த காரில் பிரதமர் மோடி இன்று ஊர்வலம்


கர்நாடக சட்டசபை தேர்தல்; 10 கி.மீ. திறந்த காரில் பிரதமர் மோடி இன்று ஊர்வலம்
x

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு 2-வது நாளான இன்று 10 கி.மீ. திறந்த காரில் பிரதமர் மோடி ஊர்வலம் மேற்கொண்டார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 13-ந்தேதி நடைபெறும். தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் களத்தில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் உள்ளனர். கர்நாடகாவில், கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் தொடங்கினார். இதுவரை 7 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டு உள்ளார். அவர், இன்று 7-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடி, 8 மணிநேரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பா.ஜ.க. திட்டமிட்டு இருந்தது. எனினும், நீட் தேர்வை கவனத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படாமல் இருக்கும் வகையில் இந்த ஊர்வலம் இரண்டாக பிரிக்கப்பட்டது.

இதன்படி, பிரதமர் மோடி பெங்களூருவில் நேற்று 26 கி.மீ. தூரத்திற்கு ஊர்வலம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து 2-வது நாளான இன்று மத்திய பெங்களூரு வழியே கடந்து சென்ற அவரது ஊர்வலம் 5 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது.

3 மணிநேர ஊர்வலம் நேற்று நடந்த நிலையில், வேறு வழியில் இன்று குறுகிய தொலைவை ஊர்வலம் சென்று கடந்து உள்ளார்.

இதற்காக காவி வண்ண திறந்த காரில், நின்றபடி அவர் சென்றார். வழிநெடுகிலும் மக்கள் அவரை நோக்கி கையசைத்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் மீது பூக்களை அள்ளி வீசினர்.

அவரது இந்த ஊர்வலம் காலை 10 மணியளவில் கெம்பேகவுடா சிலை பகுதியில் தொடங்கியது. நியூ திப்பசாண்டிரா சாலை பகுதியில் தொடங்கி, பழைய மெட்ராஸ் சாலை வழியே பயணித்த அவரது கார், பின்னர் காலை 11.30 மணியளவில் டிரினிட்டி சர்கிளில் முடிந்தது.

அவருடன் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர், மத்திய பெங்களூரு தொகுதி எம்.பி.யான பி.சி. மோகன் உள்ளிட்டோரும் காரில் பயணித்தனர்.

இந்த பயணத்திற்கு பின்னர், பிரதமர் மோடி டுவிட்டரில், என் மீது அன்பை பொழிந்த துடிப்பான நகர மக்களின் முன்னால் நான் தலைவணங்குகிறேன். எனது வாழ்நாள் முழுவதும் இதற்காக நான் மகிழ்ச்சியடைவேன் என பதிவிட்டு உள்ளார்.

கர்நாடகாவில் அவர் இன்று 4 வெவ்வேறு இடங்களில் பொது கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.


Next Story