கர்நாடகத்தில் 101 எம்.எல்.ஏ.க்கள் 3-வது முறையாக வெற்றி
கர்நாடகத்தில் 101 பேர் மூன்று முறைக்கு மேல் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி உள்ளனர். சித்தராமையாவும், தேஷ்பாண்டேவும் 9-வது முறையாக வென்று சட்ட சபைக்குள் நுழைகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் 101 பேர் மூன்று முறைக்கு மேல் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி உள்ளனர். சித்தராமையாவும், தேஷ்பாண்டேவும் 9-வது முறையாக வென்று சட்ட சபைக்குள் நுழைகிறார்கள்.
9-வது முறையாக வெற்றி
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 13-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் புது முகங்களுக்கு வாய்ப்பு அளித்திருந்தது. அந்த புதுமுகங்களை காட்டிலும் தொடர்ந்து 3 முதல் 9 முறை வரை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.
அதன்படி, காங்கிரஸ் தலைவர்களான சித்தராமையாவும், ஆர்.வி.தேஷ்பாண்டேவும் 9-வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்ல உள்ளனர். இவர்களில் ஆர்.வி.தேஷ்பாண்டேவுக்கு 76 வயதாகிறது. உத்தரகன்னடா மாவட்டம் ஹலியால் தொகுதியில் தொடர்ந்து 9 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரும், சித்தராமையாவும் 9 முறை வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்லும் மூத்த எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள்.
101 எம்.எல்.ஏ.க்கள்
இதுதவிர 3 மற்றும் அதற்கு மேற்பட்ட முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக 101 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதாவது 3 முறை எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றவர்கள் 32 பேரும், 4 முறை வெற்றி பெற்றவர்கள் 37 பேரும் உள்ளனர். அதுபோல், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட 10 பேர் 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார்கள். தினேஷ் குண்டுராவ் உள்பட 16 பேர் 6 முறை எம்.எல்.ஏ.க்களாக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.பி.ஜெயச்சந்திரா, பா.ஜனதா முன்னாள் மந்திரிகள் ரமேஷ் ஜார்கிகோளி, ஆர்.அசோக் ஆகிய 3 பேரும், 7 -வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்கின்றனர். காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார், மற்றொரு தலைவரான ராமலிங்க ரெட்டி ஆகிய 2 பேரும் 8-வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைகிறார்கள்.