தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது.. கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்


மாண்டியாவில் நேற்று நடந்த போராட்டத்தில் பாஜக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் திறக்கும்படி தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால் கர்நாடக அரசு தங்களிடம் போதிய அளவில் தண்ணீர் இருப்பு இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என்று கூறியது. இதையடுத்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

அதில் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி கோரியுள்ளது. இதை அடுத்து காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.

வினாடிக்கு சுமார் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என வலியுறுத்தி பாஜக சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. மாண்டியாவில் பாஜக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்நிலையில், கர்நாடக விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து மாண்டியாவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன. ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்து பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் நாளை நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.


Next Story