தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு; சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக விவசாயிகள் வழக்கு


தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு; சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக விவசாயிகள் வழக்கு
x
தினத்தந்தி 5 Sep 2023 6:45 PM GMT (Updated: 5 Sep 2023 6:45 PM GMT)

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக விவசாயிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு இன்று(புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

பெங்களூரு:

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக விவசாயிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு இன்று(புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

தர்ஷன் புட்டண்ணய்யா எம்.எல்.ஏ.

மண்டியா மாவட்டம் மேல்கோட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. தர்ஷன் புட்டண்ணய்யா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் விவசாயிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த வழக்கு நாளை(இன்று) விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு மூலம் கர்நாடகம் மற்றும் காவிரி படுகையில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலவரத்தை எடுத்துக் கூறுவோம். அதுவே எங்கள் நோக்கம். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கில் விவசாயிகள் சார்பில் மூத்த வக்கீல் ரவி வர்மகுமார் ஆஜராகி வாதாடுகிறார். காவிரி படுகையில் தற்போதுள்ள சூழ்நிலை பற்றிய அனைத்து ஆவணங்களும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

விதைப்பு பணிகள்

காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் நேரடியாக வந்து காவிரி படுகையில் நிலவும் வறட்சி நிலவரத்தை ஆராய வேண்டும். உண்மை நிலவரத்தை நேரில் அவர்கள் கண்டால் தான் வறட்சி நிலவரம் குறித்து அவர்களுக்கு முழுமையாக தெரியவரும். ஏற்கனவே கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் வந்துவிட்டது. நீர் இருப்பும் 22 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) அளவுக்கு கீழ் வர தொடங்கி விட்டது.

இனிவரும் நாட்களில் மழை பெய்யவில்லை என்றால் குடிநீருக்கே மிகவும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. காவிரி ஒழுங்குமுறை குழு கூட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று உறுதி அளித்தனர். அதை நம்பி ஏராளமான விவசாயிகள் ஏற்கனவே விதைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு

தற்போது தண்ணீர் இல்லை என்றும், பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் சொல்கிறார்கள். இந்த தகவலையும் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு தெரிவித்து இருக்கிறோம். காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளிக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story