'கடினமான நேரத்திலும் கெஜ்ரிவால் மக்களை பற்றியே சிந்திக்கிறார்' - டெல்லி மந்திரி அதிஷி பேட்டி
குடும்ப உறுப்பினர்களைப் போல் டெல்லி மக்களை கெஜ்ரிவால் கவனித்து வருகிறார் என அதிஷி தெரிவித்தார்.
புதுடெல்லி,
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து 22-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவாலை 6 நாட்கள்(வரும் 28-ந்தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை காவலில் இருந்தாலும் மக்களைப் பற்றியே டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என டெல்லி நீர்வளத்துறை மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை காவலில் இருந்தபடி மாநில அரசுக்கு அவர் வழங்கிய அறிவுறுத்தல்கள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "அமலாக்கத்துறை காவலில் இருந்தபடி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல் உத்தரவை பிறப்பித்துள்ளார். நீர்வளத்துறை மந்திரியான என்னிடம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இவ்வளவு இக்கட்டான காலகட்டத்திலும் டெல்லி மக்களைப் பற்றி, கைது செய்யப்பட்ட ஒரு நபர் எப்படி சிந்திக்க முடியும்?
அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை டெல்லி முதல்-மந்திரியாக மட்டும் நினைக்கவில்லை. டெல்லியின் 2 கோடி மக்களையும் அவர் தனது குடும்ப உறுப்பினர்களாக கருதுகிறார். ஒரு குடும்பத் தலைவர் தனக்குப் பிரியமானவர்களை எப்படிக் கவனித்துக்கொள்கிறாரோ அதே போலத்தான் கடந்த ஒன்பது வருடங்களாக டெல்லியை கெஜ்ரிவால் கவனித்து வருகிறார்" என்று அதிஷி தெரிவித்தார்.