கேரளாவில் தனியார் பள்ளி பஸ்-ஆட்டோ மோதல்; டிரைவர், 4 பெண்கள் பலி


கேரளாவில் தனியார் பள்ளி பஸ்-ஆட்டோ மோதல்; டிரைவர், 4 பெண்கள் பலி
x
தினத்தந்தி 25 Sep 2023 6:49 PM GMT (Updated: 25 Sep 2023 8:10 PM GMT)

காசர்கோடு அருகே தனியார் பள்ளி பஸ்-ஆட்டோ மோதிய விபத்தில் டிரைவர், 4 பெண்கள் பலியானார்கள். உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றபோது இந்த பரிதாபம் நடந்துள்ளது.

காசர்கோடு,

காசர்கோடு மாவட்டம் மொக்ரால் பகுதியை சேர்ந்தவர்கள் உமாலிமா(வயது 50), பீபாத்திமா மோகர்(50), நபீசா(49). இவர்கள் 3 பேரும் சகோதரிகள் ஆவார்கள். இந்த நிலையில் நேற்று மாலை இவர்கள் 3 பேரும், தங்களது சித்தியான பீபாத்திமா(64) என்பவருடன் ஒரு ஆட்டோவில் பல்லத்தட்காவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். டிரைவர் அப்துல் ரவூப்(64) என்பவரின் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

இதற்கிடையே மான்யாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பஸ் மாணவர்களை அவரவர்களின் வீ்ட்டில் இறக்கிவிட்டு காலியாக திரும்பி சென்று கொண்டிருந்தது. படியட்கா கிராம பஞ்சாயத்து செர்கலா-அட்கஸ்தலா மாநில நெடுஞ்சாலை பல்லத்தட்கா பகுதியில் மாலை 6 மணியளவில் சென்றபோது தனியார் பள்ளி பஸ்சும், அவர்கள் சென்ற ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

5 பேர் பலி

இந்த விபத்தில் ஆட்டோ பலத்த சேதமடைந்து அப்பளம்போல் நொறுங்கியது. தனியார் பள்ளி பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. இதில் ஆட்டோவின் இடுபாடிகளில் சிக்கிய டிரைவர் அப்துல் ரவூப், உமாலிமா, பீபாத்திமா மோகர், நபீசா, பீபாத்திமா ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், படியட்கா போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் பலியான 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காசர்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து படியட்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் பள்ளி பஸ்-ஆட்டோ மோதிய விபத்தில் டிரைவர், 4 பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story