சபரிமலையில் மீண்டும் இளம்பெண்கள் தரிசனமா..? கேரள போலீசார் மறுப்பு


சபரிமலையில் மீண்டும் இளம்பெண்கள் தரிசனமா..? கேரள போலீசார் மறுப்பு
x

கோப்புப்படம்

சபரிமலையில் 2 இளம்பெண்கள் தரிசனம் செய்ததாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்ல தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018 -ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சபரிமலைக்கு சென்ற இளம்பெண்கள் பலர் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக பாதி வழியிலேயே திரும்பினர். ஆனால் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கனகதுர்கா மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து அம்மிணி ஆகிய 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் தரிசனம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதைக் கண்டித்து கேரளா முழுவதும் கடும் போராட்டம் வெடித்தது.

இந்த சம்பவங்களுக்கு பின்னர் கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்த இளம்பெண்களும் சபரிமலையில் தரிசனம் செய்ய முன்வரவில்லை. இளம்பெண்கள் தரிசனத்துக்கு சென்றால் பிரச்சினை ஏற்படும் என்பதால் போலீசாரும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சபரிமலையில் தற்போது மீண்டும் 2 இளம்பெண்கள் தரிசனம் செய்ததாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. அதாவது 18-ம் படி அருகே நின்று கொண்டு 2 இளம்பெண்கள் செல்பி எடுப்பது போன்ற புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியானது. இது அய்யப்ப பக்தர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த புகைப்படம் உண்மை இல்லை என்றும். இளம்பெண்கள் யாரும் சபரிமலைக்கு வரவில்லை என்றும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பத்தனம்திட்டா சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த படத்தை பரப்பியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story