கேரளாவில் ரெயிலுக்கு தீ வைப்பு வழக்கு; டெல்லியில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை


கேரளாவில் ரெயிலுக்கு தீ வைப்பு வழக்கு; டெல்லியில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
x

கேரளாவில் ரெயிலுக்குள் பயணிகள் மீது தீ வைத்ததில் 3 பேர் பலியான வழக்கில் டெல்லியில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. இன்று அதிரடி சோதனை நடத்தி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி கடந்த ஏப்ரல் 2-ந்தேதி எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே சென்றபோது, அதில் பயணித்த நபர் ஒருவர், இரவு 10 மணியளவில் திடீரென எழுந்து சென்று சக பயணி மீது பெட்ரோல் ஊற்றி, தீ பற்ற வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பக்கத்தில் இருந்த பெண், 2 வயது குழந்தை உள்பட சிலர் அதிர்ச்சியில் ரெயில் பெட்டியில் இருந்து வெளியே குதித்து உள்ளனர். சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து, இழுத்து ரெயிலை நிறுத்த முயன்றதற்கு முன்பே, பயத்தில், அவர்கள் வெளியே குதித்ததில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில், குற்றவாளியான ஹாருக் சைபி (வயது 27) என்பவர் மராட்டியத்தின் ரத்னகிரி நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

டெல்லி ஷாகீன் பாக் பகுதியை சேர்ந்தவரான அவரை மராட்டிய போலீசின் பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் மத்தியு புலனாய்வு துறை இணைந்து கைது செய்தது. சைபிக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது.

அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் முரண்பட்ட தகவல்களை கூறியுள்ளார். சிலரான் நான் பயன்படுத்தப்பட்டேன் என தொடக்கத்தில் கூறிய அவர், பின்னர் அதனை மாற்றி, எல்லாவற்றையும் திட்டமிட்டு, அவற்றை நான் மட்டுமே செய்தேன் என்று கூறினார்.

இந்த வழக்கில், இஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக்கின் உணர்ச்சியூட்டும் பேச்சுகளை கேட்டு அதனால் ஈர்க்கப்பட்டு, திட்டமிட்டு, ரெயில் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார் என கேரளா போலீசார் ஆய்வில் கூறியுள்ளனர். இதனடிப்படையில், போலீசாரிடம் இருந்து வழக்கை பெற்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில், சைபிக்கு பின்னணியில் பெரிய சதி திட்டம் இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, டெல்லி ஷாகீன் பாக் மற்றும் சந்தேகத்திற்கு உரிய நபர்களின் பிற பகுதிகள் என 10 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ஷாருக் சைபி கூறும்போது, ரெயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் என ஒருவர் அறிவுரை வழங்கினார். அதன் பேரில் ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்தேன். கோழிக்கோடுக்கு ரெயிலில் சென்ற போது பாதி வழியில் இறங்கி பெட்ரோல் வாங்கினேன், பெட்ரோல் வாங்கிவிட்டு அடுத்த ரெயிலில் ஏறி பயணிகள் மீது தீ வைத்தேன். தீ வைத்த பின், அதே ரெயிலில் வேறு பெட்டியில் ஏறி கண்ணூர் சென்றேன். பிறகு மராட்டியம் சென்றபோது ரத்னகிரி அருகே ரெயிலில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டது என்றும் போலீசில் கூறியுள்ளார்.


Next Story