சுயேச்சையாக களமிறங்கும் பெண் வேட்பாளரின் கணவர் கோடீசுவரர்
சுயேச்சையாக களமிறங்கும் பெண் வேட்பாளரின் கணவர் கோடீசுவரர் ஆவார்.
பெங்களூரு:
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலை சேர்ந்தவர் கே.ஜி.எப். பாபு என்கிற யூசுப் ஷெரீப். பெரும் கோடீசுவரரான இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூரு சிக்பேட்டை தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டு வந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மேயர் கங்காம்பிகே, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.வி.தேவராஜ் உள்பட பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே கங்காம்பிகே காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் சுயேச்சையாக நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதுபோல் கே.ஜி.எப். பாபு தனது மனைவி ஷஜியா தரனும்வை சிக்பேட்டையில் சுயேச்சையாக களமிறக்கியுள்ளார். அவர் நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தன்னிடம் ரூ.50 ஆயிரம் ரொக்கம் கையிருப்பு இருப்பதாகவும், ரூ.38.58 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.40.59 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளது.
மேலும் ஒட்டு மொத்தமாக தனது கணவரின் பெயரில் ரூ1.622 கோடி அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதில் ரூ.2.10 லட்சம் கையிருப்பாகவும், 16 வங்கிகளில் 88 லட்சம் ரூபாய் டெபாசிட் இருப்பதாகவும் உள்ளது. மேலும் பலருக்கு ரு.46.90 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.18 கோடி முதலீடுகள் உள்ளன.
இதில் ரூ.91.08 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ 518 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகள் உள்பட ரூ.83.56 கோடி சொத்துக்களும் உள்ளது. ரூ.1,474.46 கோடி மதிப்பிலான 24 நிலங்களும், 3 விவசாய நிலத்தின் மதிப்பு ரூ.52.53 கோடி ஆகும் என குறிப்பிடத்தக்கது. பல்வேறு வங்கிகளில் ரூ.65.32 கோடி கடனும் வாங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது கே.ஜி.எப். பாபு தாக்கல் செய்த வேட்பு மனுவில், தன்னிடம் ரூ.1,763 கோடி சொத்துக்கள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருந்தார். தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.121 கோடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.