பெண்கள் கடத்தல் - இந்தியாவில் விற்பனை... வங்காளதேச இளைஞரின் ஜோரான வேலை


பெண்கள் கடத்தல் - இந்தியாவில் விற்பனை... வங்காளதேச இளைஞரின் ஜோரான வேலை
x
தினத்தந்தி 29 Nov 2023 12:18 PM IST (Updated: 29 Nov 2023 12:19 PM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத ஆட்கடத்தல் நெட்வொர்க்கானது, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பரவி, செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது.

பந்திப்போரா,

நாட்டில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 55 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) இந்த மாத தொடக்கத்தில் அதிரடி சோதனை நடத்தியது. இதில், 4 ஆட்கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடைய 44 பேர் பிடிபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. சட்டவிரோத ஆட்கடத்தல் நெட்வொர்க்கானது, தமிழகம், கர்நாடகம், ராஜஸ்தான், அரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவியிருந்ததும் அந்த பகுதிகளில் இருந்து செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது.

இதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையில், காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் ரோகிங்கியா பெண்களை கடத்தி வந்து, பணத்திற்காக விற்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

இதுபற்றி பந்திப்போரா மாவட்டத்தின் மூத்த போலீஸ் சூப்பிரெண்டு லக்சயா சர்மா கூறும்போது, வங்காளதேசத்தில் இருந்து ரோகிங்கியா பெண்களை கடத்தி வந்து இந்தியாவின் வடகாஷ்மீரில் விற்பனை செய்வது விசாரணையில் தெரிய வந்தது.

இதன்பின்னர், பணம் பெற்று கொண்டு அவர்களை உள்ளூரில் உள்ளவர்களிடம் விற்றுள்ளனர். அவர்களை வாங்கிய நபர்களுடன் அந்த பெண்களுக்கு திருமணமும் நடந்துள்ளது.

இந்த ஆட்கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் பிடிபட்டு உள்ளனர். இவர்களில் ரோகிங்கியாவை சேர்ந்த மன்சூர் ஆலம் என்பவரும் ஒருவர். கைது செய்யப்பட்ட அந்நபர், பணத்திற்காக ரோகிங்கியா பெண்களை கடத்தி, காஷ்மீரில் விற்றுள்ளார்.

இந்த சட்டவிரோத செயல் மொத்தத்திற்கும் பின்புலத்தில் இருந்து முக்கிய புள்ளியாக செயல்பட்டவர் ஆலம் என அவர் கூறினார். இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில், ரோகிங்கியா பெண்கள் 2 பேர், உள்ளூர்வாசிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், 2 வகையில் குற்றங்கள் நடந்துள்ளன.

முதலில், அகதி முகாம்களில் இருந்து பெண்களை கடத்தி வந்து, சட்டவிரோத வகையில் இந்தியாவுக்குள் ஊடுருவ செய்துள்ளனர். 2-வது, மணப்பெண்களாக அவர்கள் விற்கப்பட்டு உள்ளனர். அது ஆட்கடத்தல் ஆகும் என கூறியுள்ளார். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story