குடகு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி மாணவர்கள் போராட்டம்


குடகு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2023 6:45 PM GMT (Updated: 23 Aug 2023 6:45 PM GMT)

குடகு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் மற்றும் சரியான பாதுகாப்பு அளிக்க கோரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

குடகு :-

மருத்துவ கல்லூரி

குடகு மாவட்டம் மடிகேரியில் குடகு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அறிவியல் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மடிகேரி மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் கல்லூரிக்குள் புகுந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து மாணவிகள் தரப்பில் போலீசில் புகார் அளித்தும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மாணவ-மாணவிகள் போராட்டம்

இதனால் அதிருப்தியடைந்த மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது கல்லூரியில் சரியான பாதுகாப்பு இல்லை. அடிப்படை வசதிகள் இல்லை. காவலாளிகளை நியமிக்கவேண்டும்.

இரவு நேரத்தில் மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதை பார்த்த கல்லூரி முதல்வர் கரியப்பா மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் மாணவர்கள் கேட்கவில்லை. தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த போராட்டம் குறித்து குடகு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீசிற்கு தகவல் அளிக்கப்பட்டது.

மாணவர்களுடன் பேச்சு வார்த்தை

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக கூறிய அவர் சரியான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை கேட்ட மாணவர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து கல்லூரி முதல்வரை அழைத்த போலீசார், வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நவீனத்துவத்துடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி உத்தரவிட்டார். மேலும் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.


Next Story