நடுரோட்டில் பழுதாகி நின்ற கர்நாடக அரசு பஸ்


பெங்களூரு ராஜாஜிநகர் கோபாலபுரத்தில் நடுரோட்டில் பழுதாகி கர்நாடக அரசு பஸ் ஒன்று நின்றுவிட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பெங்களூரு:

பெங்களூருவில் இருந்து பிற மாநிலங்களுக்கு கர்நாடக போக்குவரத்து கழக பஸ்கள் (கே.எஸ்.ஆர்.டி.சி.) இயக்கப்படுகின்றன. நேற்று மாலை 5 மணி அளவில் பெங்களூரு சிட்டி பஸ் நிலையத்தில் இருந்து புட்டபர்த்தி நோக்கி கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பஸ் ராஜாஜிநகர் டாக்டர் ராஜ்குமார் சாலையில் வந்து கொண்டிருந்தது. கோபாலபுரத்தில் வந்த போது அந்த பஸ்சின் சக்கரம் திடீரென பழுதாகி ஒருமுறை குலுங்கி நகர முடியாமல் நடுரோட்டில் குறுக்காக நின்றது.

இதனால் பயந்துபோன பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். அதிர்ஷ்டவசமாக சாலையின் தடுப்புச்சுவரில் மோதவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நடுரோட்டில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் அந்த சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாகடி ரோடு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் அந்த சாலையில் நின்ற வாகனங்களை, மற்றொரு வழிப்பாதையில் செல்ல அனுமதித்தனர். அதே வழிப்பாதையில் வாகனங்கள் வரவும் அனுமதிக்கப்பட்டது. அதாவது பஸ் பழுதாகி நின்ற வழிப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே கிரேன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து நடுரோட்டில் நின்ற பஸ் கிரேன் உதவியுடன் அங்கிருந்து இழுத்து வரப்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டது.

மேலும் பஸ்சில் ஏற்பட்ட பழுதை, போக்குவரத்து ஊழியர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி சரிசெய்தனர். இதையடுத்து அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story