யாரை கேட்டு தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட்டீர்கள்?-கர்நாடக அரசுக்கு குமாரசாமி கேள்வி
யாரை கேட்டு தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட்டீர்கள்? என்று கர்நாடக அரசுக்கு குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:
யாரை கேட்டு தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட்டீர்கள்? என்று கர்நாடக அரசுக்கு குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அனுமதி வழங்கவில்லை
நைஸ் ரோடு திட்ட முறைகேடுகளுக்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரே நேரடி காரணம். இது இந்த மாநிலத்திற்கே தெரியும். அந்த ரோடுக்கு அருகில் உள்ள நிலங்களை கொள்ளையடித்தவர்கள் யார் என்பது தெரியும். இந்த திட்டத்திற்கு தேவேகவுடா தான் அனுமதி வழங்கினார். பெங்களூருவில் வாகன நெரிசலை குறைக்க அந்த திட்டம் அனுமதிக்கப்பட்டது. ஆனால் நிலத்தை கொள்ளையடிக்க அவர் அனுமதி வழங்கவில்லை.
இந்த திட்டத்தில் நாங்கள் ஏதாவது தவறு செய்து இருப்பதை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்தே விலகி விடுகிறோம். இந்த திட்டம் தொடர்பாக உண்மையான திட்டத்தை திருத்தியவர் அப்போது நகர வளர்ச்சி மந்திரியாக இருந்த டி.கே.சிவக்குமார். இது அவரது சகோதரர் டி.கே.சுரேசுக்கு தெரியாதா?. 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை யாருடைய பெயருக்கு மாற்ற இவர்கள் முயற்சி செய்கிறார்கள்?. இத்தகையவர்கள் எங்களை குறை சொல்கிறார்கள்.
ஆட்சியாளர்களால் முடியவில்லை
ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்க இந்த ஆட்சியாளர்களால் முடியவில்லை. கர்நாடகத்தை விற்பனை செய்ய முயற்சி செய்கிறார்கள். எனக்கு மக்கள் ஓய்வு கொடுத்துள்ளார்களாம். காங்கிரசாருக்கும் ஓய்வு கொடுக்கும் காலம் தூரம் இல்லை. என்னை மிரட்ட வேண்டாம். டி.கே.சிவக்குமார் என்னை மிரட்ட முடியாது. 40 சதவீத கமிஷன் புகார் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் நீதி விசாரணை குழு அமைத்துள்ளனர். இதற்கு முன்பு நீதிபதி வீரப்பா தலைமையில் குழு அமைத்தனர். அவர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதனால் நீதிபதியை மாற்றியுள்ளனர்.
மக்கள் கொடுத்த அதிகாரத்தை தமிழகத்திடம் அடகு வைத்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள். யாரை கேட்டு தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட்டீர்கள்?. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது நல்ல மழை பெய்தது. அப்போது தமிழகத்திற்கு நீர் கொடுத்தோம்.
மேகதாது திட்டம்
தேவேகவுடா முதல்-மந்திரியாக இருந்தபோதும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால் நீர் திறக்கப்பட்டது. தேவேகவுடா குறித்து பேச யாருக்கும் தகுதி இல்லை. கர்நாடகத்தில் தற்போது வறட்சி இருக்கிறது. காங்கிரசின் கூட்டணி கட்சியான தி.மு.க.விடம் பேசி மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற வேண்டியது தானே?.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.