கிரகலட்சுமி திட்ட விண்ணப்பத்தில் மந்திரி படத்தை அகற்ற கோரி அடம் பிடித்த பெண்


கிரகலட்சுமி திட்ட விண்ணப்பத்தில் மந்திரி படத்தை அகற்ற கோரி அடம் பிடித்த பெண்
x

தனது உருவப்படம் இல்லாததால் பணம் கிடைக்காது என கருதி கிரகலட்சுமி திட்ட விண்ணப்ப படிவத்தில் மந்திரியின் உருவப் படத்தை அகற்ற கோரி பெண் அடம் பிடித்த சம்பவம் பிரியப்பட்டணாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரியப்பட்டணா:

தனது உருவப்படம் இல்லாததால் பணம் கிடைக்காது என கருதி கிரகலட்சுமி திட்ட விண்ணப்ப படிவத்தில் மந்திரியின் உருவப் படத்தை அகற்ற கோரி பெண் அடம் பிடித்த சம்பவம் பிரியப்பட்டணாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிரகலட்சுமி திட்டம்

கர்நாடக காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் கிரகலட்சுமி திட்டம் உள்பட 5 வாக்குறுதிகளை அறிவித்தது. தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளதால் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பணி கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

மாநிலம் முழுவதும் கிராம ஒன், கர்நாடக ஒன், பெங்களூரு ஒன் மையங்களிலும், அரசு அலுவலகங்களிலும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று விண்ணப்பித்து வருகிறார்கள். கிரகலட்சுமி விண்ணப்ப படிவத்தில் மேல் பகுதியில் வலது புறம் முதல்-மந்திரி சித்தராமையாஉருவப் படமும், இடதுபுறம் மந்திரி லட்சுமி ஹெப்பால்கர்உருவப் படமும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், இடதுபுறம் உள்ள மந்திரியின் படத்தை அகற்றிவிட்டு தனது படத்தை வைக்குமாறு ஒரு பெண் அடம்பிடித்த சம்பவம் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணாவில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

மந்திரி படம்

மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா பெட்டதபுரா கிராமத்தில் உள்ள கிராம ஒன் மையத்தில் கிரகலட்சுமி திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் வந்து நீண்ட வரிசையில் காத்து நின்று இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கிரகலட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வந்தார். அப்போது விண்ணப்ப படிவத்தை அவர் பூர்த்தி செய்தார். அப்போது விண்ணப்ப படிவத்தில் இடது புறத்தில் மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் படம் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர், கிராம ஒன் மையத்தின் ஊழியரிடம் சென்று, 'விண்ணப்ப படிவத்தில் உள்ள படம் என்னுடையது அல்ல. வேறு பெண்ணின் படம் உள்ளது. அவரை பார்த்தால் பணக்கார பெண் போல் உள்ளது, இதனால் எனக்கு வர வேண்டிய பணம் அவருக்கு சென்றுவிடும். எனவே அவரது படத்தை அகற்றிவிட்டு எனது படத்தை வைக்க வேண்டும். அப்போது தான் எனக்கு பணம் கிடைக்கும். அவரது படம் இருந்தால் எனக்கு பணம் கிடைக்காது' என்று கூறி உள்ளார்.

பரபரப்பு

அதாவது மந்திரி லட்சுமி ஹெப்பால்கரின் படத்தை தான் வேறு பெண் என்றும், அதனை அகற்ற வேண்டும் என்றும் கூறி உள்ளார். அந்த பெண்ணின் அறியாமையை நினைத்து அங்கிருந்தவர்கள் சிரித்தனர். மேலும், கிராம ஒன் மைய ஊழியர்கள் 'அது மந்திரியின் படம், அதனை அகற்ற முடியாது, நீங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்திட்டு கொடுங்கள், உங்கள் படம் வேறு இடத்தில் வரும்' என்றனர். ஆனாலும் இதனை ஏற்று கொள்ளாத அந்த பெண், பிடிவாதமாக, 'நான் கையெழுத்து போட்டால் என்னுடைய பணம் எனக்கு கிடைக்காது, அவருக்கு சென்றுவிடும். இதனால் அந்த பெண்ணின் படத்தை நீக்கிவிட்டு எனது படத்தை வைக்க வேண்டும்' என்றார். இதனால் கிராம ஒன் மைய ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். இதையடுத்து ஊழியர்கள், அங்கிருந்த பெண்கள் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணிடம் எடுத்து கூறினர். இதனை ஏற்று கொண்ட அவர், அரை மனதோடு கையெழுத்திட்டு விண்ணப்ப படிவத்தை கொடுத்து சென்றார். இந்த சம்பவத்தால் கிராம ஒன் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story