நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் "சிவசக்தி" என்ற பெயரில் அழைக்கப்படும்: பிரதமர் மோடி பேச்சு


நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என்ற பெயரில் அழைக்கப்படும்: பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 26 Aug 2023 8:51 AM IST (Updated: 26 Aug 2023 2:27 PM IST)
t-max-icont-min-icon

நிலவில் லேண்டர் கால்பதித்த ஆக. 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படுமென பிரதமர் மோடி கூறினார்.

பெங்களூரு,

சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகை தந்தார். அவர் விஞ்ஞானிகளை பாராட்டியதுடன், அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;

உங்கள் மத்தியில் இன்று இருப்பதன் மூலம் எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி ஏற்படுகிறது. நான் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றபோது என் மனம் முழுவதுமாக உங்களுடனே இருந்தது. நான் இந்தியாவுக்கு வந்த உடனே உங்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என நான் நினைத்தேன்.

உங்கள் அனைவருக்கும் நான் சல்யூட் செய்ய நினைத்தேன். நீங்கள் தேசத்தை எந்த அளவுக்கு உயரத்துக்கு அழைத்துச்சென்றுள்ளீர்கள் என்றால், இது சாதாரணமானது அல்ல. இந்தியா நிலவில் கால் வைத்துள்ளது. நம் நாட்டின் கவுரவத்தை நிலவில் நாம் நிலைநாட்டியுள்ளோம். விண்வெளி துறையின் சாதனைகள், பங்களிப்பு இளைஞர்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது.

நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என்ற பெயரில் அழைக்கப்படும். இமயம் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர்களை இணைக்கின்ற பெயராக இது இருக்கும். இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியும் கூட. சந்திரயான்-3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது, எனவே சிவசக்தி என்ற பெயர் அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சாட்சி.

அதேபோல 2019-ல் சந்திரயான் 2 நிலவில் தனது இடத்தை பதித்த இடம் திரங்கா(மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டவே திரங்கா என பெயர் சூட்டப்படுகிறது.

சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும். ஆகஸ்ட் 23ந்தேதி விஞ்ஞானம், அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

1 More update

Next Story