காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க ஹைபிரிட் பயங்கரவாதி கைது


காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க ஹைபிரிட் பயங்கரவாதி கைது
x

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதியை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.



புத்காம்,



ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஸ்ரீநகர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தின் 2ஆர்.ஆர். படை பிரிவு இணைந்து கூட்டு வேட்டை நடத்தியது. இதில், நாட்டில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதியை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.

அவர் சங்கம் புத்காம் பகுதியை சேர்ந்த ஆர்ஷித் அகமது என தெரிய வந்துள்ளது. அகமதுவிடம் இருந்து 5 கைத்துப்பாக்கிகள், 5 தோட்டா உறைகள் மற்றும் 50 துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 2 கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

இதுபற்றி ஷால்தெங் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றும் பதிவானது. இந்த 'ஹைபிரிட்' பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரின் பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பதில்லை. அவர்களை பயங்கரவாத குழுக்கள் ஒன்று அல்லது இரண்டு முறையே தாக்குதல் நடத்த பயன்படுத்தி கொள்ளும்.

கடந்த 2021ம் ஆண்டில் காஷ்மீரில் பொதுமக்கள், போலீசார், அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் சிறுபான்மை சமூக மக்கள் என பலரை இலக்காக கொண்டு 20க்கும் கூடுதலான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் இதுபோன்ற 'ஹைபிரிட்' வகை பயங்கரவாதிகளே ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த மே 1-ந்தேதி குல்காம் போலீசாருடன் இணைந்து காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி வேட்டையில், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் யாமின் யூசப் பட் என்றும் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் உள்ளூர் பயங்கரவாதிகளுடனும் தொடர்பில் இருந்து பயங்கரவாதம் தொடர்புடைய சம்பவங்களில் ஈடுபட பணியமர்த்தப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதேபோன்று கடந்த மே 10-ந்தேதி, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதிகள் 4 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த ஹைபிரிட் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதும், பயங்கரவாத குழுக்கள் அவர்களை பயன்படுத்தி கொள்ளாமல் தடுத்து நிறுத்துவதும் பெரும் சவாலான பணியாக உள்ளது என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story