ராகுல் காந்திக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி: மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கும் வகையில் மக்களவை வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
புதுடெல்லி,
மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
அதேநேரம் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டது. இதனால் அவர் மீண்டும் எம்.பி.யானார்.
ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கும் வகையில் மக்களவை வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த அசோக் பாண்டே என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இதை நீதிபதிகள் கவாய், சந்தீப் மேத்தா அமர்வு விசாரித்து, மனுவை நேற்று தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு 2 முறை விசாரணைக்கு வந்தபோதும், மனுதாரர் அசோக் பாண்டே கோர்ட்டில் ஆஜராகவில்லை என குற்றம் சாட்டிய நீதிபதிகள், இதுபோன்ற அற்பமான மனுவை தாக்கல் செய்ததற்காக அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தனர்.
முன்னதாக அசோக் பாண்டே கடந்த ஆண்டும் இதுபோன்ற 2 மனுக்களை அடுத்தடுத்து தாக்கல் செய்திருந்தார். அவற்றுக்கும் முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் என சுப்ரீம் கோர்ட்டு அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.