'தேர்தலில் சந்திப்போம், இறுதி முடிவை மக்கள் எடுக்கட்டும்' - மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே


தேர்தலில் சந்திப்போம், இறுதி முடிவை மக்கள் எடுக்கட்டும் - மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
x

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஏக்நாத் ஷிண்டே அரசு பதவியில் நீடிக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே அரசு சுமார் 2½ ஆண்டு காலம் ஆட்சியில் நீடித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆளும் சிவசேனாவில் திடீர் பிளவு ஏற்பட்டது. சிவசேனாவின் 57 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் அந்த கட்சியின் மூத்த மந்திரியாக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணி அமைத்து உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்தனர்.

அதைத் தொடர்ந்து சிவசேனா அதிருப்தி அணி ஜூன் 30-ந் தேதி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றியது. ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனார். பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

இதனிடையே ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக அப்போதைய சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார். அடுத்த நாளே சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றி ஷிண்டே தரப்பினர் அனுப்பினர். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும் போது, எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று அவர்கள் கூறினர்.

மேலும் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இரு தரப்பினரும் கட்சி சின்னத்தை உரிமை கோரினர். இந்த அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, இந்த மனுக்கள் அரசியலமைப்பு சாசனத்தின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக கூறி, விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின்படி தகுதி நீக்க நடவடிக்கையில் சபாநாயகரின் அதிகாரம் தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் மூலம் ஏக்நாத் ஷிண்டே அரசு பதவியில் நீடிக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசிய போது, "நாம் தேர்தலில் சந்திப்போம். இறுதி முடிவை மக்கள் எடுக்கட்டும். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கை குறித்து சபாநாயகர் முடிவு செய்யாவிட்டால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம்" என்று அவர் தெரிவித்தார்.


Next Story