காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க பிரதமரிடம் நேரம் கேட்டு கடிதம் - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி


காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க பிரதமரிடம் நேரம் கேட்டு கடிதம் - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
x

அனைத்து கட்சி தலைவர்களுடன் காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து விவாதிக்க பிரதமரிடம் நேரம் கேட்டு கடிதம் எழுதி உள்ளதாகவும், பிரதமர் மோடியுடன் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கேட்கப்படும் என்றும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

அலமட்டியில் பாகினா பூஜை

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் நிடகுந்தி தாலுகாவில் லால் பகதூர் சாஸ்திரி(அலமட்டி) அணை உள்ளது. தொடர் மழை காரணமாக இந்த அணை முழுவதுமாக நிரம்பி உள்ளது. இதையடுத்து, அலமட்டி அணையில் செப்டம்பர் 2-ந் தேதி(அதாவது நேற்று) முதல்-மந்திரி சித்தராமையா பாகினா பூஜை நடத்துவார் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று அலமட்டி அணையில் முதல்-மந்திரி சித்தராமையா, நீர்ப்பாசனத்துறை மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் ஆகியோர் பாகினா பூஜை நடத்தினார்கள்.

பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மழை அளவு குறைவு

அலமட்டி அணை 519.6 மீட்டர் அடி உயரம் கொண்டதாகும். அங்கு 123 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. 100 கோடி கனஅடி) தண்ணீரை சேமித்து வைக்க முடியும். மாநிலத்திலேயே அலமட்டி அணை மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நாராயணபுரா அணையும் நிரம்பி இருக்கிறது. அந்த அணையில் இருந்து குடிநீர் தேவைக்காகவும், மின் உற்பத்திக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தமாக மாநிலத்தில் பருவமழை பெய்யாத காரணத்தால் பல அணைகள் நிரம்பாமல் உள்ளது.

ஜூன் மாதத்தில் 56 சதவீதம் மழை குறைவாக பெய்திருந்தது. ஆகஸ்டு மாதமும் மழை குறைவாக தான் பெய்துள்ளது. மாநிலத்தில் பல தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. வறட்சி பாதித்த தாலுகாக்களை அறிவிக்க மந்திரிசபை துணை குழு 3 முறை கூடி ஆலோசனை நடத்தி உள்ளது. வருகிற 4-ந் தேதி (நாளை) மீண்டும் ஒருமுறை ஆலோசனை நடத்த உள்ளனர். தற்போது 113 தாலுகாக்கள் வறட்சி பாதித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4-ந் தேதி அறிவிப்பு

இதுதவிர 73 தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. இதுபற்றியெல்லாம் வருகிற 4-ந் தேதி ஆலோசனை நடத்தப்படும். அன்றைய தினமே மாநிலத்தில் வறட்சி பாதித்த தாலுகாக்கள் அறிவிக்கப்படும். வறட்சி பாதித்த தாலுகாக்கள் அறிவித்த பின்பு, அந்த தாலுகாக்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கும்படி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.

மத்திய அரசும் வறட்சி பாதித்த தாலுகாக்கள் குறித்து ஆய்வு நடத்த உள்ளது. தேசிய பேரிடர் இழப்பின் கீழ் வறட்சி பாதித்த தாலுகாக்களில் நிவாரண உதவி வழங்கப்படும். கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே மத்திய அரசு வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. அதனால் கூடுதல் நிதி ஒதுக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.

பிரதமருக்கு அரசு கடிதம்

காவிரி நதிநீர் விவகாரத்தில் மட்டும் அரசு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், கிருஷ்ணா நதிநீர் விவகாரத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற தவறான தகவலும் பரப்பப்படுகிறது. காவிரி, கிருஷ்ணா என்ற பேதம் கிடையாது. அனைத்து விவசாயிகளும் அரசுக்கு ஒன்று தான். தென் கர்நாடகா, வடகர்நாடகா என்று பிரிக்காமல் அகண்ட கர்நாடகமாக இருக்க வேண்டும். தென் கர்நாடக விவசாயிகள், வடகர்நாடக மாவட்ட விவசாயிகள் என்று பிரித்து பார்ப்பதில்லை.

காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக கர்நாடகம், தமிழ்நாடு இடையே இருக்கும் பிரச்சினை குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக கர்நாடக அரசு சார்பில் நேரம் கேட்டு கடிதம் எழுதி அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல், அனைத்து கட்சி தலைவர்களுடன், மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவாத்தை சந்தித்து பேசவும் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

மேகதாது அணை கட்ட அனுமதி

கர்நாடக அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமரை சந்தித்து பேச இன்னும் நேரம் ஒதுக்கவில்லை. பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கிய உடன் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து பேச உள்ளேன். காவிரி நதிநீர், மகதாயி நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். குறிப்பாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கும் பிரதமரிடம் அனுமதி கேட்கப்படும்.

ஏனெனில் குடிநீருக்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்துள்ளது.காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக வருகிற 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்க உள்ளது. இதுதொடர்பாக கர்நாடக வக்கீல்களுடன், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆலோசித்துள்ளார். அணைகளின் நீர்மட்டம், மழை குறைவு குறித்து வாதத்தை முன்வைக்க வக்கீல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story