மீனவர்கள் விடுதலை: மத்திய மந்திரிக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடிதம்


மீனவர்கள் விடுதலை: மத்திய மந்திரிக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடிதம்
x
தினத்தந்தி 10 Dec 2023 9:24 PM IST (Updated: 10 Dec 2023 9:38 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஐதராபாத்,

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழகம் மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்களை விடுவிக்கக்கோரி புதுவை துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது;

இலங்கை கடற்படையினரால், நேற்று (09-12-2023) சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதியுள்ளேன். அதில்,

"இந்த கடிதத்தை மிகுந்த வருத்தத்தோடும் பதட்டத்தோடும் எழுதுகி்றேன். காரைக்கால் நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவரது மீன்பிடிப் படகையும், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் டிசம்பர் 9-ஆம் தேதி சிறை பிடித்திருக்கிறார்கள். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு படகையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் சிறை பிடித்திருக்கிறார்கள்.

சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என்று மீனவர்களின் குடும்பத்தினர் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாரதப் பிரதமரின் வழிகாட்டுதலோடு மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தை இராஜதந்திர முறையில் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அப்பாவி மீனவர்களை விடுதலை செய்து அவர்கள் பாதுகாப்பாக அவர்களது குடும்பங்களுக்குத் திரும்ப வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story