கர்நாடக பதவியேற்பு விழாவுக்கு ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் வரலாம்; காங்கிரஸ் அழைப்பு


கர்நாடக பதவியேற்பு விழாவுக்கு ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் வரலாம்; காங்கிரஸ் அழைப்பு
x

ஜனநாயகத்திற்காக போராட விரும்புபவர்கள் கர்நாடக பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வரும்படி காங்கிரஸ் அழைப்பு விடுத்து உள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்களுக்கும் கூடுதலாக 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கிறது. அடுத்த முதல்-மந்திரி ஆக சித்தராமையாவை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ முறையில் இன்று அறிவித்து உள்ளது. துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் செயல்படுவார் என அக்கட்சியின் பொது செயலாளரான கே.சி. வேணுகோபால் இன்று அறிவித்து உள்ளார்.

இதன்படி, நாடாளுமன்ற தேர்தல் வரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக சிவக்குமார் நீடித்திடுவார். முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் ஆகியோர் மே 20-ந்தேதி பதவியேற்று கொள்வார்கள் என கூறினார்.

இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மற்றும் மூத்த தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி பதவியேற்பு விழாவுக்கு அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடப்படும்.

எங்களுடைய ஒரே பார்முலா மக்கள் சேவையே ஆகும். மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் யாரும் அவர்கள் விரும்பும் அளவுக்கு சேவையாற்றலாம். இது ஒரு கொண்டாட்டம் அல்ல.

ஆனால், ஜனநாயகத்திற்கான காங்கிரஸ் கட்சியின் அர்ப்பணிப்பு ஆகும். ஜனநாயகத்திற்காக போராட விரும்புபவர்கள் மற்றும் அரசியலமைப்பை பாதுகாக்க விரும்புபவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தரலாம் என அவர் கூறியுள்ளார்.


Next Story