கடவுள் ராமர் நமது நாட்டின் அடையாளம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு


கடவுள் ராமர் நமது நாட்டின் அடையாளம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு
x

கடவுள் ராமர் நமது நாட்டின் அடையாளம் என ராமநவமி விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த ராமநவமி விழா ஒன்றில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ராமர் கோவில் கட்டுவது பற்றி மக்களில் பலரும் தங்களது பலவித எண்ணங்களை வழங்கினர்.

அந்த இடத்தில் ஒரு மருத்துவமனை கட்டலாம் என சிலர் கூறினர். வேறு சிலர் ஒரு பள்ளிக்கூடம் கட்டலாம் என்று கூறினர். ஒரு சிலர், தொழிற்சாலை ஒன்றை அமைக்கலாம் என்று கூட ஆலோசனை வழங்கினர். அவர்கள் கடவுள் ராமரை புரிந்து கொள்ளாத மனிதர்கள்.

கடவுள் ராமர் என்பவர் குறிப்பிடும்படியாக கல், மரம் அல்லது மண்ணிலோ பதிய செய்யப்பட்ட உருவகம் அல்ல. நமது கலாசாரம் மற்றும் நம்பிக்கையின் மையம் அவர். அவர் நமது அடையாளம். நம்முடைய நாட்டின் அடையாளமும் கூட என சிங் கூறியுள்ளார்.

நாங்கள் மருத்துவமனைகள், பள்ளி கூடங்களை மற்றும் ஆலைகளையும் கட்டுவோம். கோவில்களையும் கூட நாங்கள் எழுப்புவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆயுத படைகளை வலுப்படுத்தும் வகையில் பெண்களும் அதில் பங்காற்றுகின்றனர் என கூறிய அவர், பெண்களுக்கு அதிகாரமளித்தல் திசையில் ஒன்றாக முன்னோக்கி பயணிக்கிறோம் என்றும் கூறினார்.

ஒரு குறிப்பிட்ட நபர்களிடமே அதிகாரம் குவிந்து கிடக்கிறது என்ற எண்ணத்திற்கு இன்றைய புதிய இந்தியாவில் இடம் இல்லை என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்து உள்ளார்.


Next Story