கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.
மைசூரு:
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் அணைகள் நிரம்பின. அதன்படி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணையும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணையும் நிரம்பியது.
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 124.64 அடிக்கு தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 112 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 425 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 2,283.73 அடியாக இருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு கபிலாவில் 14 ஆயிரத்து 63 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த 2 அணைகளில் இருந்தும் திறந்து விடப்பட்ட நீர் காவிரி ஆற்றில் ஒன்றாக சங்கமித்து தமிழகம் செல்கிறது. அதன்படி நேற்று இந்த 2 அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 24 ஆயிரத்து 488 கன அடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.