மத்திய பிரதேசம்: போலீசாரை பார்த்ததும் லஞ்ச தொகையை மென்று, விழுங்கிய அரசு அதிகாரியால் பரபரப்பு


மத்திய பிரதேசம்:  போலீசாரை பார்த்ததும் லஞ்ச தொகையை மென்று, விழுங்கிய அரசு அதிகாரியால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 July 2023 7:05 AM GMT (Updated: 25 July 2023 7:41 AM GMT)

மத்திய பிரதேசத்தில் போலீசாரை பார்த்ததும் லஞ்ச பணம் ரூ.5 ஆயிரத்திற்கான நோட்டுகளை அரசு அதிகாரி ஒருவர் மென்று, விழுங்கியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஜபல்பூர்,

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் கத்னி நகரில் வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் பத்வாரி கஜேந்திர சிங். பர்கேடா கிராமவாசி ஒருவர் ஒரு வேலையாக கஜேந்திர சிங்கிடம் சென்றுள்ளார். ஆனால், அவரிடம் கஜேந்திர சிங் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணம் தரும்படி கேட்டுள்ளார்.

இதுபற்றி லோக் ஆயுக்தா சிறப்பு போலீஸ் குழுவினரிடம் அந்த கிராமவாசி புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, அந்த அதிகாரியை பொறி வைத்து பிடிப்பது என அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இதன்படி, கஜேந்திர சிங்கின் தனி அலுவலகத்திற்கு சென்று அந்த நபர் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணம் கொடுத்திருக்கிறார். அதனை பெற்று கொண்ட கஜேந்திர சிங்கை மறைந்திருந்த போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

போலீசாரை பார்த்ததும் உஷாரான கஜேந்திர சிங், லஞ்ச பணம் எல்லாவற்றையும் வாயில் போட்டு மென்று, விழுங்கினார். இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை அளித்த பின்னர் அவர் நலமுடன் உள்ளார் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதுபற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச பணத்துடன் பிடிபட்டதும், தப்பிப்பதற்காக உடனே அவற்றை அரசு அதிகாரி விழுங்கியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story