காட்டுத் தீயை விரைவாக கண்டறிய ஏ.ஐ. தொழில்நுட்பம்.. மராட்டிய புலிகள் காப்பகத்தில் அறிமுகம்


AI based fire detection system, காட்டுத் தீ செயற்கை நுண்ணறிவு
x

புகை மற்றும் மேகங்கள் இரண்டையும் வேறுபடுத்தி இரவு நேரத்திலும் அடையாளம் கண்டறியும் திறன் இந்த ஏ.ஐ. அமைப்பின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று.

நாக்பூர்:

மராட்டிய மாநிலத்தில் உள்ள பென்ச் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

இந்த ஏ.ஐ. தொழில்நுட்ப அமைப்பானது கேமராவுடன் கூடிய கோபுரம் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை கொண்டுள்ளது.

இந்த கேமரா, 15 கி.மீ. தொலைவு வரை உள்ள பகுதிகளை படம்பிடிக்கக்கூடிய அதிக செயல்திறன் கொண்டது. இது 350 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட புலிகள் காப்பக பகுதியை படம்பிடிக்கும் வகையில், கிரிங்கிசரா கிராமத்தின் அருகே காப்பகத்தின் மிக உயரமான ஒரு மலை உச்சியில் உள்ள கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இது கோலிட்மாராவில் உள்ள மேற்கு பென்ச் ரேஞ்ச் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது

பான்டெரா எனப்படும் செயற்கை நுண்ணறவு இயங்குதளமானது, மூன்று நிமிடங்களுக்குள் காட்டுத் தீ பற்றிய எச்சரிக்கைகளை வழங்குகிறது. இதற்காக, கேமராவில் இருந்து பெறப்படும் வீடியோ மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான தரவு இரண்டையும் பயன்படுத்துகிறது.

புகை மற்றும் மேகங்கள் இரண்டையும் வேறுபடுத்தி இரவு நேரத்திலும் அடையாளம் கண்டறியும் திறன் இந்த ஏ.ஐ. அமைப்பின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று.

ஜி.பி.எஸ். வசதி கொண்ட தண்ணீர் தொட்டிகள், வனத்துறை வாகனங்கள் போன்றவற்றுடனும் இந்த அமைப்பை ஒருங்கிணைக்க முடியும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன அமைப்பு, தீப்பற்றிய பகுதிகளை கண்டறியும் செயல்திறன் மற்றும் தீயணைப்பு பணியை மேம்படுத்தும் என பென்ச் புலிகள் காப்பக துணை இயக்குனர் பிரபு நாத் சுக்லா கூறினார்.

1 More update

Next Story