மராட்டியம்: வாலிபர்கள் சாகச வீடியோ எடுத்தபோது பைக் மோதி இளம்பெண் பலியான சோகம்


மராட்டியம்:  வாலிபர்கள் சாகச வீடியோ எடுத்தபோது பைக் மோதி இளம்பெண் பலியான சோகம்
x

மராட்டியத்தில், சமூக ஊடகத்தில் பிரபலம் அடைவதற்காக, சாகச காட்சிகளை வீடியோவாக எடுத்தபோது வாலிபர்கள் சென்ற பைக் மோதியதில் சாலையில் சென்ற இளம்பெண் பலியானார்.


புனே,


மராட்டியத்தின் புனே நகரில் முகம்மதுவாதி பகுதியில் கிருஷ்ணா நகர் என்ற இடத்தில் பால்கி சாலையில் வாலிபர்கள் இருவர் பைக் ஒன்றில் சென்று உள்ளனர். அவர்களில் ஆயன் ஷேக் என்பவர் பைக்கை ஓட்டியுள்ளார்.

பைக் விரைவாக சென்று கொண்டிருந்தபோது, சையத் ஜாவித் ஷேக் என்பவர் பைக்கின் பின்னால் அமர்ந்தபடி இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிடுவதற்காக வேண்டிய, சாகச காட்சிகளை படம் எடுத்தபடி இருந்து உள்ளார்.

இந்நிலையில், சாலையில் தஸ்லிம் பெரோஸ் பதான் (வயது 31) என்ற இளம்பெண் நடந்து சென்று உள்ளார். அவர் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில், பைக் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பதான் உயிரிழந்து உள்ளார். அவர், புனேவின் ஆதர்ஷ் நகர் பகுதியை சேர்ந்தவர். விபத்து ஏற்படுத்தி விட்டு வாலிபர்கள் தப்பியோடி உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து, வான்வதி காவல் நிலைய காவல் துறை உதவி ஆய்வாளர் ஜெயவந்த் ஜாதவ் தலைமையிலான போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில், தப்பியோடிய வாலிபர்கள் 2 பேரும் பின்னர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலிசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story