மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு; விசாரணையின்போது உணர்ச்சிவசப்பட்ட பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங்
குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த விவரங்களைக் கேட்டு பிரக்யா சிங் உணர்ச்சிவசப்பட்டார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் (தற்போதைய பா.ஜ.க. எம்.பி.), ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு பிரக்யா சிங்கிற்கு ஜாமீன் கிடைத்த நிலையில், மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று பிரக்யா சிங் எம்.பி. உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் வாக்குமூலம் மற்றும் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பிரக்யா சிங்கிடம் சுமார் 60 கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு பிரக்யா சிங், தனக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்தார். இதனிடையே குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த விவரங்களைக் கேட்டு பிரக்யா சிங் உணர்ச்சிவசப்பட்டார். இதனால் விசாரணை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தொடர்ந்தது. மேலும் நாளைய தினம் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.