கடந்த 5 ஆண்டுகளில் 12 லட்சம் வேலைகளை மட்டுமே மோடி அரசு உருவாக்கியுள்ளது - காங்கிரஸ் தலைவர் கார்கே


கடந்த 5 ஆண்டுகளில் 12 லட்சம் வேலைகளை மட்டுமே மோடி அரசு உருவாக்கியுள்ளது - காங்கிரஸ் தலைவர் கார்கே
x
தினத்தந்தி 4 Aug 2023 9:30 PM GMT (Updated: 4 Aug 2023 9:30 PM GMT)

கடந்த 5 ஆண்டுகளில் 12 லட்சம் வேலைகளை மட்டுமே மோடி அரசு உருவாக்கியுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

'கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான மத்திய அரசு 12 லட்சத்து 20 ஆயிரம் வேலைகளை மட்டுமே புதிதாக உருவாக்கியுள்ளது. அதாவது, வருடத்துக்கு சராசரியாக 24 ஆயிரத்து 400 வேலைகள் மட்டும்தான். இந்த புள்ளிவிவரத்தை நாங்கள் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி தொடர் பங்காளிப்பாளர்கள் குறித்த மத்திய அரசின் விவரத்தின் மூலமே இது தெரியவந்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பா.ஜ.க. உறுதி அளித்திருந்தது. அதன்படி பார்த்தால், 9 ஆண்டுகளில் 18 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். நமது இளைஞர்கள் இப்போது இருண்ட எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர். நம் நாட்டு தெருக்களில் கோபமும், வன்முறையும் நிலவுவதில் ஆச்சரியமில்லை. வேலைவாய்ப்பு வழங்குவதில் பா.ஜ.க. பெரிய அளவில் தோல்வி அடைந்துள்ளது. கற்பனை செய்ய முடியாத வேலையில்லா திண்டாட்டம், வலியை உண்டாக்கும் விலைவாசி உயர்வு, பா.ஜ.க.வால் உருவாக்கப்பட்ட வெறுப்புணர்வு எல்லாம் சேர்ந்து இந்த பேரழிவு நிலையை உருவாக்கியுள்ளன. நம் நாட்டில் ஏழை, நடுத்தர மக்கள் பிழைத்திருக்க பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட வேண்டும். போதும் போதும் என்ற நிலைக்கு நாடு வந்துவிட்டது.'

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story