மேற்கு வங்காளத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் பலி: கிராம மக்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி


மேற்கு வங்காளத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் பலி: கிராம மக்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி
x

மேற்கு வங்காளத்தில் சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கிராம மக்களிடம் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார்.

12 பேர் சாவு

மேற்கு வங்காளத்தின் பர்பா மேதினிபூர் மாவட்டத்தின் எக்ரா அருகே உள்ள காடிக்குல் கிராமத்தில் சட்ட விரோதமாக பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் கடந்த 16-ந் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.ஐ.டி. போலீசார் இதுவர 9 பேரை கைது செய்து உள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சம் இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணமும் மாநில அரசு அறிவித்தது.

பணி நியமன ஆணை

இந்த விபத்து நடந்து 11 நாட்களுக்கு பிறகு நேற்று சம்பவம் நடந்த கிராமத்துக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்றார். அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் மாநில அரசின் இழப்பீடு தொகைக்கான காசோலைகளை வழங்கிய அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் இருந்து தலா ஒருவருக்கு ஊர்க்காவல் படையில் வேலைக்கான பணி நியமன ஆணையையும் வழங்கினார். அங்கு அவர் பேசும்போது, இந்த விபத்துக்காக கிராம மக்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார்.

போலீசில் தெரிவிக்க வேண்டும்

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'சட்ட விரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்துக்கு நான் தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மத்திய உளவுத்துறை சரியாக செயல்பட்டிருந்தால், சரியான உளவுத்தகவல்களை மாநில அரசு பெற்றிருந்தால் இந்த வெடிவிபத்தை தடுத்திருக்கலாம்' என தெரிவித்தார்.

இதைப்போல வேறு சட்ட விரோத பட்டாசு ஆலைகள் இயக்கப்பட்டால் அது குறித்து உள்ளூர் போலீசில் தெரிவிக்குமாறு அங்குள்ள மக்களை மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார். முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் மாநில தலைமை செயலாளர் திவிவேதி மற்றும் பல்வேறு அதிகாரிகளும் உடன் சென்றனர்.

ஒரே மாதத்தில் 3 விபத்துகள்

முன்னதாக இந்த விபத்து குறித்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கக்கோரி எதிர்க்கட்சி தலைவர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு, சி.ஐ.டி அதிகாரிகளே விசாரணையை தொடருமாறும் அறிவுறுத்தியது.

மேற்கு வங்காளத்தில் ஒரே மாதத்தில் 3 பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்திருக்கும் நிலையில், எக்ராவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story