நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் மம்தா பானர்ஜி
நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமராக மோடி 3வது முறை ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும்.
இந்நிலையில், இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக வரும் 25-ம் தேதி தேசிய தலைநகருக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நிதி ஆயோக்கின் ஒன்பதாவது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் மம்தா கலந்துகொண்டு மாநிலத்திற்கான மத்திய நிலுவைத்தொகை மற்றும் கிராமப்புற வீட்டுவசதி மற்றும் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ. நிதிகள் குறித்த பிரச்சினையை எழுப்ப உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார். டெல்லி வரும் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களையும் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான கவுன்சிலில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும், யூனியன் பிரதேசங்களின் துணை கவர்னர்களும் மற்றும் பல மத்தியமந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.