எர்ணாகுளம் அருகே கோவிலில் 10 பவுன் நகை திருடிய ஆசாமி கைது


எர்ணாகுளம் அருகே கோவிலில் 10 பவுன் நகை திருடிய ஆசாமி கைது
x

எர்ணாகுளம் அருகே கோவிலில் 10 பவுன் நகை திருடிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அரூரில் குமார விலாசம் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பூஜை முடிந்த பின்னர் வழக்கம் போல் கோவில் நிர்வாகிகள் கோவிலை பூட்டி விட்டு சென்றனர்.

நேற்றுமுன்தினம் காலையில் பூசாரி கோவிலை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது சாமிக்கு அணிவித்து இருந்த தங்க கிரீடம், நெக்லஸ் உள்பட 10 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கோவிலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே வருவது பதிவாகி இருந்தது. அந்த நபர் காவி வேட்டியும், நீல நிற சட்டையும் அணிந்திருந்தார். அவர் சாமி சிலை முன்பு நின்று பிரார்த்தனை செய்துவிட்டு நகைகளை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கினர். விசாரணையில் கோவிலில் திருடியவர் ஆலப்புழா அருகே உள்ள அம்பலப்புழா பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து திருட்டு நடந்த 24 மணி நேரத்திற்குள் போலீசார் அவரை கைது செய்தனர். அத்துடன் அவரிடம் இருந்து கோவிலில் திருடப்பட்ட நகைகளை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story