மத்திய பிரதேசம்: ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணியை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற கணவர் - விசாரணைக்கு உத்தரவு


மத்திய பிரதேசம்: ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணியை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற கணவர் - விசாரணைக்கு உத்தரவு
x

கர்ப்பிணி ஒருவரை அவரது கணவர் தள்ளுவண்டியில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

தேமா,

மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தின் ரானே கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக '108' ஆம்புலன்சுக்கு கணவர் போன் செய்தார். ஆனால் 2 மணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் தவித்த அவர், தனது மனைவியை தள்ளுவண்டியில் கிடத்தி அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றார்.

அவரது கிராமத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இருந்த அந்த மையத்தில் டாக்டரோ, நர்சுகளோ இல்லை. பின்னர் அரசு ஆம்புலன்ஸ் ஒன்றில் அங்கிருந்து ஹட்டாவுக்கு தனது மனைவியை அழைத்து சென்றார்.

அங்குள்ள ஆஸ்பத்திரியிலும் சரியான சிகிச்சை கிடைக்காததால், பின்னர் தமோ மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு கர்ப்பிணி மாற்றப்பட்டார். அங்கு அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே கர்ப்பிணி ஒருவரை அவரது கணவர் தள்ளுவண்டியில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைப்பார்த்த மாவட்ட சுகாதார அதிகாரிகள், இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர்.


Next Story