நடுரோட்டில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை


நடுரோட்டில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 3 Oct 2023 10:10 PM GMT (Updated: 5 Oct 2023 11:52 AM GMT)

கோலார் டவுனில் பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

கோலார்:

கோலார்(மாவட்டம்) டவுன் இ.டி.சி.எம். சர்க்கிள் பகுதியில் நேற்று ஒருவர் நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் தனது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் இதுபற்றி கோலார் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கழுத்தை அறுத்துக் கொண்ட நபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அந்த நபர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்தனர்.

போலீஸ் விசாரணை

விசாரணையில் அவரது பெயர் ரகமத் உல்லா பெய்க்(வயது 35) என்பதும், அவர் கோலார் தங்கவயல் தாலுகா பேத்தமங்களா பகுதியில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் கியாஸ் அடுப்பை சரி செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

ஆனால் அவர் என்ன காரணத்திற்காக பட்டப்பகலில் மக்கள் முன்னிலையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுபற்றி கோலார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story