பீகாரில் பயங்கரம்.. மனைவி மற்றும் 3 மகள்களை வெட்டிக் கொன்ற நபர்
தலைமறைவாக உள்ள அன்சாரி, ஏற்கனவே ஒரு மகளை ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர்.
மோதிஹரி:
பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டம், பவாரியா கிராமத்தில் வசித்து வந்த ரேஷ்மா கதுன் (வயது 40) என்ற பெண் மற்றும் அவரது மகள்கள் அர்பன் கதுன் (வயது 15), ஷாப்ரன் கருன் (வயது 12) மற்றும் ஷாஜாதி கதுன் (வயது 9) ஆகியோர் இன்று அவர்களின் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த கொடூரம் நடந்துள்ளது.அவர்களின் கழுத்து மற்றும் உடலின் பிற இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரேஷ்மாவின் கணவர் அன்சாரி தலைமறைவாகிவிட்டார். அவர்தான் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அன்சாரிக்கு இரண்டு முறை திருமணமாகி உள்ளது. முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
இரண்டாவது மனைவியான ரேஷ்மாவுக்கு 5 மகள்கள் பிறந்தனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. மற்றொரு மகளை ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு உத்தர பிரதேச மாநிலத்தின் சீதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.