மைனர் பெண்ணுக்கு திருமணம்; பெற்றோர் உள்பட 11 பேர் மீது வழக்கு


மைனர் பெண்ணுக்கு திருமணம்; பெற்றோர் உள்பட 11 பேர் மீது வழக்கு
x

மைனர் பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்த பெற்றோர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவமொக்கா;

மைனர் பெண் திருமணம்

சிவமொக்கா தாலுகா மலவகொப்பா கிராமத்தை சோ்ந்த மைனர் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இதே போல் சந்தேகடூர் கிராமத்தை சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவருக்கு பெற்றோர் இல்லை. தனது சித்தப்பா-சித்தி பராமரிப்பில் இருந்து வந்தார். அந்த வாலிபரும், மைனர் பெண்ணும் உறவினர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

திருமணம்

இந்த நிலையில் இவர்கள் காதல் குறித்து இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் ஒப்புதல் வழங்கினர். மேலும் இவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அந்த பெண் மைனர் என்பதால் ஓராண்டு முடிந்த பிறகு திருமணம் நடத்தி வைக்கலாம் என மணமகளின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இருப்பினும் வாலிபரின் வீட்டார் இருவருக்கும் கடந்த மாதம் (ஜூலை) 30-ந்தேதி அதே கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடத்தி வைத்தனர்.

மைனர் பெண் காப்பகத்தில் சேர்ப்பு

இதுகுறித்து சிவமொக்கா குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அதிகாரிகள், சிவமொக்கா போலீசாருடன் சேர்ந்து அந்த மைனர் பெண்ணின் வீட்டிற்கு சென்று உள்ளனர். அதிகாரிகள் வருவதை அறிந்த மைனர் பெண்ணின் கணவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதையடுத்து அதிகாரிகள் அந்த மைனர் பெண்ணை அங்கிருந்து மீட்டு சிவமொக்கா நகரில் உள்ள ஆல்கொலா பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

11 பேர் மீது வழக்கு

இதுகுறித்து போலீசார், மைனர் பெண்ணின் கணவர், மணமகனின் சித்தப்பா-சித்தி, மணமகளின் பெற்றோர், திருமண மண்டப உரிமையாளர் மற்றும் திருமணம் நடத்தி வைத்த புரோகிதர் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story