போட்டியில் நடத்தை விதிமீறல்: யுஏஇ கிரிக்கெட் வீரர் ஜூனைட் சித்திக்கிற்கு அபராதம் விதிப்பு
யுஏஇ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
துபாய்,
நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் 2-வது போட்டியில் யுஏஇ அணியும் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடந்த கடைசி போட்டியில் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டியில் யுஏஇ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைட் சித்திக் நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதமும் மற்றும் இரண்டு குறைபாடு புள்ளிகளையும் பெற்றுள்ளார். அந்த போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் செய்த போது 17-வது ஓவரை வீசிய சித்திக் விக்கெட் கேட்டு மேல்முறையீடு செய்தார். அது நிராகரிக்கப்பட்ட பிறகு, நடுவரை நோக்கி தகாத வார்த்தைகளால் சித்திக் கருத்து வேறுபாடு காட்டினார். இதற்காக, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அவர்மீது கள நடுவர்கள் அக்பர் அலி மற்றும் ஷிஜு சாம் மற்றும் மூன்றாவது நடுவர் ஆசிப் இக்பால் ஆகியோர் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதுவரை எந்தவிதமான குற்றங்களும் இல்லாமல் இருந்த சித்திக், தற்போது தனது கிரிக்கெட் கேரியரில் இரண்டு குறைபாடு புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
மூன்றாவது டி20 போட்டியில் சித்திக் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி 26 ரன்களை விட்டுகொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.