புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
x

பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழுவில் ஒரு மத்திய மந்திரியும், காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் இடம்பெற்றிருப்பார்கள்.

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நேற்றைய தினம் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். மற்றொரு தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டேவின் பதவிக்காலம் கடந்த மாதம் 14-ந்தேதி நிறைவடைந்த நிலையில், 3 தேர்தல் ஆணையர்களைக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பொறுப்பில் இருக்கிறார்.

இந்நிலையில் காலியாக உள்ள 2 தேர்தல் ஆணையர்களின் பதவிகளை நிரப்புவதற்காக மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையிலான தேடுதல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி சார்பில் தலா 5 பெயர்கள் கொண்ட இரண்டு பட்டியல்கள் தயார் செய்யப்பட உள்ளன.

அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு, இந்த பட்டியலில் இருந்து 2 பேரின் பெயர்களை தேர்வு செய்யும். இந்த தேர்வுக்குழுவில் ஒரு மத்திய மந்திரி மற்றும் காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். இந்த குழு தேர்வு செய்யும் 2 நபர்களை தேர்தல் ஆணையர்களாக ஜனாதிபதி நியமனம் செய்வார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வரும் 13 அல்லது 14-ந்தேதியில் நடைபெறும் எனவும், அதைத் தொடர்ந்து 15-ந்தேதி தேர்தல் ஆணையர்களின் நியமனம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story