மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கோரி டெல்லியில் 1-ந் தேதி தர்ணா; போராட்ட குழு அறிவிப்பு
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி வருகிற 1-ந் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று மேகதாது போராட்ட குழு அறிவித்துள்ளது.
பெங்களூரு:
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி வருகிற 1-ந் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று மேகதாது போராட்ட குழு அறிவித்துள்ளது.
மேகதாதுவில் அணை திட்டம்
கர்நாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாதுவில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், மின்உற்பத்திக்காகவும் இந்த அணையை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து கர்நாடக அரசு மத்திய ஜல்சக்தி துறை, மத்திய அரசு மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளது.
தமிழகம் எதிர்ப்பு
ஆனால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதாவது மேகதாது அணை கட்டினால், தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும் என கருதி தமிழகம் இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் மேகதாது அணை திட்டத்திற்கு இதுவரை மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி கர்நாடக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
அனுமதி வழங்க கோரிக்கை
அதுபோல் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணைகட்டும் திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மேகதாது போராட்ட குழு தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கோரியும், திட்ட பணிகளை உடனடியாக தொடங்க கோரியும் வருகிற 31-ந் தேதி பெங்களூருவில் இருந்து மேகதாது போராட்ட குழுவினர் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளதாகஅறிவித்துள்ளனர்.
டெல்லியில் 1-ந்தேதி போராட்டம்
வருகிற 1-ந் தேதி (பிப்ரவரி) டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானம் அருகே மேகதாது போராட்ட குழு சார்பில் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு கொடுக்க உள்ளதாகவும், தங்களது போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் முழு ஆதரவு அளித்திருப்பதாகவும் மேகதாது போராட்ட குழுவின் தலைவர் ராமநகரில் நேற்று அறிவித்துள்ளார்.