பால் எடை அளவை குறைக்க திட்டம்; ஓட்டல் உரிமையாளர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு


பால் எடை அளவை குறைக்க திட்டம்; ஓட்டல் உரிமையாளர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு
x

தட்டுப்பாட்டை காரணம் காட்டி பால் எடை அளவை குறைக்க பால் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதற்கு ஓட்டல் உரிமையாளர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நந்தினி என்ற பெயரில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் மட்டும் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் பால் தேவை அதிகரித்துள்ளது. அரசின் முக்கிய வருவாய் ஈட்டும் துறையாகவும் பால்வளத்துறை உள்ளது. அண்மையில் பாலின் விலை தரத்திற்கு ஏற்ப உயர்வை சந்தித்தது. கோடைகாலம் நெருங்குவதால் தற்போது பால் தட்டுப்பாட்டு ஏற்பட்டு வருகிறது. சராசரியாக 15 லட்சம் லிட்டர் பாலுக்கு பதில், 13 லட்சம் லிட்டர் பால் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. புறநகர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளில் சிலர் பாலை, அரசு பண்ணைகளுக்கு வழங்காமல் இருப்பது தான் காரணம் என கூறப்படுகிறது.

பால் எடை அளவை குறைக்க முடிவு

இதற்கிடையே பால் தட்டுப்பாட்டை போக்க கூட்டமைப்பு சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலின் விற்பனை விலையை குறைக்காமல், அதன் அளவை குறைக்க பால் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பால் ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில், இனி 900 மில்லி லிட்டர் மட்டுமே விற்கப்படும் என கூறப்படுகிறது. இதேபோல் 500 மில்லி லிட்டர் பால் ரூ.24-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இனி 450 மில்லி லிட்டர் பால் ரூ.24-க்கு விற்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அதன் விலையில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது.

இதற்கு ஓட்டல் உரிமையாளர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்றுக்கொள்ள முடியாது

பெங்களூரு மடிவாளாவை சேர்ந்த அமுதா:-

பால் தட்டுப்பாடு காரணமாக பாக்கெட்டுகளில் அடைத்து அரசு சார்பில் விற்கப்படும் பாலின் அளவை குறைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். ஏனெனில் அரசு சார்பில் விற்கப்படும் பால் கலப்படம் இல்லாமல் சுத்தமாக இருக்கும் என்று நம்பி தான் மக்கள் வாங்குகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் தட்டுப்பாட்டை காரணம் காட்டி அரை லிட்டரில் 50 மில்லியும், ஒரு லிட்டருக்கு பதில் 900 மில்லியாகவும் குறைத்து கொடுப்பது என்பது, ஒரு மோசடி ஆகும். இதுபோன்ற செயல்களில் அரசே ஈடுபட்டால், மற்ற தனியார் பால் விற்பனையாளர்கள் அதிக தண்ணீர் கலப்பது உள்ளிட்ட மோசடியில் ஈடுபடுவார்கள். எனவே பால் தட்டுப்பாட்டை போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மக்களை ஏமாற்றும் வேலையில் அரசோ, விற்பனையாளர்களோ ஈடுபடக்கூடாது.

சிக்கமகளூரு ஐ.ஜி. ரோட்டில் ஓட்டல் நடத்தி வரும் உதய்:-

கர்நாடக மாநிலத்தில் தரம் வாய்ந்த பால் என்றால் நந்தினி பால் தான். அதைத்தான் வாங்கி நாங்கள் ஓட்டலுக்கு பயன்படுத்துகிறோம். விலை உயர்ந்தாலும் அதை தான் வாங்குகிறோம். தற்போது பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், பால் அளவை குறைக்க கர்நாடக பால் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதுதவறான முடிவு. அதிலும் அதே விலை தான் என்று கூறுகிறார்கள். உதாரணத்திற்கு ஒரு லிட்டர் பாலில் 10 டீ போட்டால் 100 ரூபாய்க்கு விற்கும் பட்சத்தில் 50 ரூபாய்க்கு பால், 20 ரூபாய்க்கு சர்க்கரை, 10 ரூபாய் டீத்தூள் போக லாபம் கிடைப்பது 20 ரூபாய் தான். அதில் கியாஸ் மற்றும் சிலிண்டர் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. ஒரு லிட்டர் பாலில் 100 மில்லி குறைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தட்டுப்பாட்டை காரணம் காட்டி இதுபோன்ற செயலில் பால் கூட்டமைப்பு ஈடுபடக் கூடாது.

ஓட்டல் தொழில் பாதிப்பு

மங்களூரு அருகே முல்கி ெரயில் நிலையம் செல்லும் பகுதியில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வரும் சுஜாதா:-

பால் விலை எவ்வளவு உயர்ந்தாலும் பாலை வாங்கித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஓட்டல், டீக்கடை நடத்துகிறவர்கள் மத்தியில் உள்ளது. அதுபோல் பொதுமக்களும் பால் பாக்கெட்டுகளை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மங்களூரு பகுதியில் கோடை காலம் தொடங்கினாலும், இதுவரை பால் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கூட எழவில்லை. ஆனால் கர்நாடக பால் கூட்டமைப்பு நந்தினி பால் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், எனவே பால் எடை அளவை குறைத்து விற்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு செய்தால் டீக்கடை, ஓட்டல் நடத்துபவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே கியாஸ் விலை, பால் விலை உயர்ந்துள்ளது. இதனால் நாங்கள் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்படும். எனவே இத்தகைய முடிவை கர்நாடக பால் கூட்டமைப்பு ஒருபோதும் எடுக்க கூடாது என்பது எனது கருத்து.

மங்களூரு அருகே முல்கி ெரயில் நிலையம் செல்லும் சாலையில் ஓட்டல் நடத்தி வரும் சகுந்தலா:-

பால் அளவை குறைக்க திட்டமிட்டு உள்ளார்கள். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஓட்டல் தொழில் நஷ்டத்தில் தான் ஓடுகிறது. இந்த நிலையில் பால் அளவை குறைக்க முடிவு செய்துள்ளது எங்களை மேலும் கஷ்டத்தில் தள்ளும். எனவே கர்நாடக பால் கூட்டமைப்பு, இந்த முடிவை அமல்படுத்த கூடாது.

சிக்கமகளூருவை சேர்ந்த இல்லத்தரசி பராகத்அப்ஜா:-

தினமும் எங்கள் வீட்டுக்கு ஒரு லிட்டர் பால் வாங்குகிறேன். மாதத்திற்கு 30 லிட்டர் ஆகிறது. ஆனால் ஒருமுறை ஒரு நாளைக்கு 100 மில்லி பால் எடை அளவை, பால் கூட்டமைப்பு குறைத்தால், மாதத்திற்கு 3 லிட்டர் வரை மொத்தமாக நமக்கு குறைகிறது. ஆக மொத்தம் மாதம் 150 ரூபாய் நமது கையில் இருந்து இலவசமாக பால் நிறுவனத்திற்கு கொடுக்கும் நிலைமை ஏற்படும். பால் அளவை குறைத்து விற்பனை செய்யும்பட்சத்தில், 5 பேர் உள்ள குடும்பத்தில் பாலில் தண்ணீர் கலக்க வேண்டும். இதனால் டீ, காபி சுவை போய்விடும். எனவே பால் எடை அளவை குறைக்க கூடாது.

தட்டுப்பாடு இல்லை

சிவமொக்கா டவுன் என்.டி.சாலையில் வசித்து வரும் நந்தினி பால் முகவர் உமேஷ்:-

நான் நந்தினி பால் விற்பனை முகவராக உள்ளேன். பால் அளவை குறைக்கும் முடிவு பற்றி எங்களுக்கு இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. பால் அளவை குறைத்தால் அது சரியான நடவடிக்கையாக இருக்காது. தற்போது தான் பால் விலையை உயர்த்தினார்கள். சிவமொக்கா மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது வரை பால் எடை அளவு குறைக்கப்படவில்லை. மாவட்டத்தில் பால் தட்டுப்பாடு இல்லை. நீங்கள் பால் எடை அளவு குறைக்கப்படுவதாக கூறியதை அறிந்து இன்று (நேற்று) வந்த பால் பாக்கெட்டை அளவீடு செய்து பார்த்தேன். ஆனால் பால் எடை அளவு குறையவில்லை. வருங்காலத்தில் பால் தட்டுப்பாடு நிலவினாலும் எடை அளவு குறைக்கும் முடிவை நந்தினி பால் நிர்வாகம் எடுக்காது என்பது எனது கருத்து. எனவே பொதுமக்கள் அதிருப்தி அடைய தேவையில்லை.

மைசூரு சிட்டி பஸ் நிலையம் அருகில் டீக்கடை நடத்தி வரும் குமார்:-

கர்நாடகத்தில் பால் தட்டுப்பாடு காரணமாக பால் எடை அளவை குறைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் என்னை பொறுத்தவரை மைசூரு நகரில் பால் தட்டுப்பாடு இல்லை. வழக்கம் போல் பால் கிடைக்கிறது. ஆனால் சில்லரை விலைக்கு பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்யும் முகவர்கள் ரூ.1 அல்லது ரூ.2 கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். எனவே இதை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் பால் தட்டுப்பாட்டை காரணம் காட்டி பால் எடை அளவை குறைக்க கூடாது. இது தவறான முன்உதாரணமாகிவிடும். தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் டீ, காபி குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் நஷ்டத்தில் தான் டீக்கடை நடத்தும் சூழல் உள்ளது.

மைசூரு ஜெயதேவா பகுதியை சேர்ந்த இல்லத்தரசி தன்யா:-

மைசூரு மாநகரை பொறுத்தவரை பால் தட்டுப்பாடு இல்லை. வழக்கம் போல் பால் பாக்கெட்டுகள் கிடைக்கிறது. பால் எடை அளவும் தற்போதுவரை குறையவில்லை. ஆனால் பால் கூட்டமைப்பு, பால் தட்டுப்பாட்டை காரணம் காட்டி பால் எடை அளவை குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story