கர்நாடகத்தில் பால் விலை உயர்வு; ஒரு லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு


கர்நாடகத்தில் பால் விலை உயர்வு; ஒரு லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:45 PM GMT)

கர்நாடகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி கர்நாடக பால் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

பெங்களூரு:

லிட்டருக்கு ரூ.2 உயர்வு

கர்நாடகத்தில் நந்தினி பெயரில் கர்நாடக பால் கூட்டமைப்பு பால், தயிர், மோர் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் கர்நாடகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி பால் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அதற்கு கர்நாடக அரசு அனுமதி வழங்காத நிலையில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து பால் விலை உயர்வை நிறுத்தி வைக்கும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.

இதையடுத்து சில மணி நேரங்களில் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து 20-ந் தேதிக்கு பிறகு கா்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று பசவராஜ் பொம்மை கூறினார்.

ஆலோசனை

அதன்படி கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 21-ந் தேதி பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், பால் விலை உயர்வு குறித்து இருதரப்பும் பாதிக்கப்படாத வகையில் முடிவு அறிவிக்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில் கர்நாடக பால் கூட்டமைப்பு, பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒத்துழைப்பு வேண்டும்

கர்நாடகத்தில் நந்தினி பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது. அதன்படி தற்போது ஒரு லிட்டர் பால் ரூ.37-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ரூ.39 ஆக அதிகரிக்கும். அதே போல் தயிர் விலை ஒரு கிலோ ரூ.45-ல் இருந்து ரூ.47 ஆக அதிகரிக்கப்படும். சிறப்பு பால், சுபம் பால் விலை ரூ.43-ல் இருந்து ரூ.45 ஆகவும், சம்ருத்தி பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும், சந்திருப்தி பால் ரூ.50-ல் இருந்து ரூ.52 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது.

கர்நாடகத்தில் நந்தினி பால் விலை உயர்த்தப்பட்டாலும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, எங்கள் பால் விலை குறைவு தான். தொட்லா நிறுவன பால் லிட்டர் ரூ.44, ஜெர்சி ரூ.44, ஹெரிடேட் ரூ.48, திருமலா ரூ.48, கோவர்தன் ரூ.46, ஆரோக்கிய ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் இந்த விலை உயர்வுக்கு வாடிக்கையாளர்கள் எப்போதும் போல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமல்

மேலும் இந்த பால் விலை உயர்வு நாளை (அதாவது இன்று) முதல் அமலுக்கு வருவதாக பால் கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) காலை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

கர்நாடகத்தில் ஏற்கனவே 6 மாதங்களில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே கஷ்டப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் பால் விலையை உயர்த்தி இருப்பது, பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விற்பனை விலை எவ்வளவு?

கர்நாடகத்தில் ஒரு லிட்டர் பால் நேற்று வரை ரூ.37-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடைக்காரர்கள், வியாபாரிகள் லிட்டருக்கு 3 ரூபாயை கூட்டி ரூ.40-க்கு விற்பனை செய்து வந்தனர். குளிர்சாதன பெட்டியில் பால் வைத்து பதப்படுத்தி விற்பனை செய்வதால் லிட்டருக்கு ரூ.3 கூடுதலாக வசூலிப்பதாக வியாபாரிகள் சொல்கிறார்கள். அதனால் கர்நாடகத்தில் பால் விலை லிட்டர் இனி ரூ.42-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

பிற மாநிலங்களின் பால் விலை நிலவரம்

ஆந்திராவில் விஜயா பால் லிட்டர் ரூ.55, தமிழ்நாட்டில் ஆவின் விலை ரூ.40, கேரளாவில் மில்மா விலை ரூ.46, மராட்டியத்தில் அமுல் ரூ.51, டெல்லியில் மதர் டெய்ரி விலை ரூ.51, குஜராத் அமுல் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் நந்தினி பால் விலை குறைவு தான் என்று கர்நாடக பால் கூட்டமைப்பு கூறியுள்ளது.


Next Story